ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்:-
• ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
• இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
• உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
• சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
• மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
