வரைக்காட்சிப் படலம் - 957
957.
ஊறு. மா கடம் மா. உற ஊங்கு எலாம்.
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் ஆ. வரை. ஆடுமே;
ஆறு சேர்வன. மா. வரையாடுமே.
மா கடம் மா - பெரிய காட்டிலுள்ள மாமரங்கள்; ஊறு உற -
சேதம் அடையும்படி; ஊங்கு எலாம் - அம் மலையிடங்களில்
எல்லாம்; ஊறுமா - மேன்மேல் சுரக்கும்படி; கடம் மா மதம் -
யானைகளின் மதநீர்; ஓடும் - பெருகி ஓடும் (அந்தப் பெருக்கால்);
ஆறு சேர் வனம் - வழிகளில் திரண்ட காட்டிலுள்ள; ஆ வரை
ஆடும் - ஆச்சா மரமும் மூங்கில்களும் (வேர் அறுந்து)
அசைந்தாடும்; யாறு சேர்வன - அந்த மலையாறுகளில் நீருண்ணச்
செல்பவை; வரை யாடும் மா - மலையாடுகளும் மற்றைய
மிருகங்களுமாம்.
காட்டு மரங்கள் சேதம் அடையும்படி யானை மதநீர் பாய்ந்தது.
அம் மதத்தால் ஆச்சா முதலிய மரங்கள் வேர் பறிந்து ஒரு புறத்தில்
வீழ்கின்றன. மற்றொருபுறம் நீர் உண்ணும்படி மலையாறுகளில்
வரையாடு முதலிய காட்டு விலங்குகள் செல்லுகின்றன என்பது -
தொடர்பு உயர்வு நவிற்சியணி. 30
