வரைக்காட்சிப் படலம் - 958
958.
கல் இயங்கு கருங் குற மங்கையர்.
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா.
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்.
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே.
கல் இயங்கு - மலையில் வாழுகின்ற; கருங் குற மங்கையர்- கரிய
குறத்தியர்; அங்குக் கல்லி அகழ் - அம் மலையில் தோண்டி; காமர்
கிழங்கு எடா - அழகான கிழங்குகளை எடுப்பதற்காக; வல்லியங்கள்
நெருங்கு - புலிகள் நெருங்கி வாழும்; மருங்கு எலாம் - மலைப்
பக்கங்களிலெல்லாம்; வல் இயங்கள் - (அவற்றை விரட்ட) வலிய
பறைக் கருவிகள்; நெருங்கி மயங்கும் - மிகுதியாக ஒலிக்கும்.
குறத்தியர் கிழங்குகளைத் தோண்டி எடுக்கவேண்டிய
பருவமாதலால் குறவர் பலவகைத் தோற்கருவிகளை முழக்குகின்றனர்
என்றார். எடா - செய்யா என்னும் வினையெச்சம். 31
