வரைக்காட்சிப் படலம் - 956
956.
துன் அரம்பை நிரம்பிய. தொல் வரை.
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன. ஆங்கு.
இன் நரம்பு அயில்கின்றனர். ஏழைமார்.
தொல் வரை - பழைய அந்த மலையில்; துன் அரம்பை நெருங்கி
வளர்ந்த வாழைகள்; நிரம்பிய - நிரம்பியவை; துன்னு அரம்பையர்-
(அங்கு) வந்துள்ள தெய்வப் பெண்களின்; ஊருவின் தோன்றும் -
தொடை போலத் தோன்றுவன (அங்கு); ஏழைமார் - மாதர்கள்;
கின்னரம் பயில் - கின்னரம் என்ற தேவ சாதியார் பாடுகின்ற;
கீதங்கள் என்ன - இனிய பாடல் என்று சொல்லும்படி (அந்த
மலையில்); இன் நரம்பு - யாழினை; அயில்கின்றனர்-
மீட்டுகின்றார்கள்.
மகளிரின் தொடைக்கு உவமையாகும். வாழை இங்கே
உவமேயமாகவும். தொடை உவமானமாகவும் சொல்லப்பெற்றன -
எதிர்நிலையுவமையணி. 29
