வரைக்காட்சிப் படலம் - 955
955.
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்.
புகலும். வாள் அரிக் கண்ணியர் பூண் முலை.
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும். ஆரமும் மாரவம் கோங்குமே.
புகலும் வாள் அரிக்கு - சிறப்பித்துச் சொல்லும் வாள்போல்
கொடிய சிங்கத்தையொத்த; அண்ணியர் பொன்புயம் - ஆடவர்களின்
அழகிய தோள்களில்; வாள் அரிக் கண்ணியர் - ஒளிமிக்க செவ்வரி
பரந்த கண்களையுடைய பெண்களின்; பூண் முலை - பூண் அணிந்த
தனங்கள்; புகலும் - சேர்ந்த அளவில்; அகிலும் ஆரமும் - (மார்பில்
அணிந்த) அகில் குழம்பும் சந்தனக் குழம்பும்; ஆர அங்கு ஓங்கும் -
நிறைந்து அத்தோள்களில் சிறப்பாக விளங்கும்; அகிலும் - (புயத்திற்கு
ஒப்பான) அம் மலையிடங்களிலும்; ஆரமும் மாரவமும் - சந்தன
மரங்களும். குங்கும மரங்களும்; கோங்கும் - கோங்கு மரங்களும்
(பொருந்தியிருக்கும்).
மாதர் தம் கணவரைத் தழுவுகையில் அவர்கள் அணிந்த அகிலும்
ஆரமும் ஆண்களின் தோள்களில் சேர்ந்து மிகச் சிறக்கும் என்பது.
வேறு உரை: வாள் அரிக் கண்ணியர்: ஒளி பொருந்திய வண்டுகள்
மொய்க்கும் மாலை சூடிய வீரர் என்றும் உரைக்கலாம். மரவம்:
குங்கும மரம். மாரவம் - நீட்டல் விகாரம். 28
