வரைக்காட்சிப் படலம் - 948
948.
சுந்தர வான மாதர்
துவர் இதழ்ப் பவள வாயும்.
அந்தம்இல் சுரும்பும். தேனும்.
மிஞிறும் உண்டு - அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர். ‘கைத்து ஓர்
பசை இல்லை’ என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன்
வள்ளங்கள் பலவும் கண்டார்.
அல்குல் விற்கும் - (தம்) அல்குலை விலைக்கு விற்கின்ற;
பைந்தொடி மகளிர் - பசும் பொன்னாலாகிய தொடிகள் அணிந்த
விலை மகளிர்; ஓர் பசை இல்லை - (செல்வமெல்லாம் பறித்த பின்)
கையிலே சிறிதும் பயனில்லை; என்ன - என்று கருதி; கைத்துவிட்ட -
வெறுத்துக் கைவிடப்பட்ட; மைந்தரின் - ஆண்களைப் போல; சுந்தர
வான மாதர் - அழகிய தெய்வப் பெண்களின்; துவர் இதழ் - சிவந்த
இதழோடு; பவள வாயும் - கூடிய பவளம் போன்ற வாயும்; அந்தம்
இல் சுரும்பும் - வரம்பு இல்லாத சுரும்பும்; தேன் மிஞிறும் - தேனும்
மிஞிறும் ஆகிய வண்டினங்களும்; உண்டு நீத்த - பருகிக் கைவிட்ட;
தீந்தேன் வள்ளங்கள் பலவும் - இனிய மதுக் கிண்ணங்கள்
பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.
தெய்வப் பெண்களின் வாயும். சுரும்பும். தேனும். மிஞிறும் குடித்து
நீத்த வெற்று வள்ளங்களை அங்குள்ளவர் பார்த்தார்கள். வீசி
எறியப்பட்ட மதுக்கிண்ணங்களுக்குக் கையில் பொருள்
உள்ளவரையிலும் தம்மிடம் வைத்துக் கொண்டு அவர்களிடம்
பொருளில்லாதபோது விலைமகளிரால் கைவிடப்படும் மைந்தரை
உவமை கூறினார் - உவமையணி. 21
