வரைக்காட்சிப் படலம் - 949

bookmark

949.

அல் பகல் ஆக்கும் சோதிப்
   பளிக்கு அறை அமளிப் பாங்கர்.
மல் பக மலர்ந்த திண் தோள்
   வானவர் மணந்த. கோல.
வில் பகை நுதலினார். தம்
   கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை
   கலனொடும் கிடப்பக் கண்டார்.
 
அல்    பகல்  ஆக்கும்  சோதி -  இருளையும்  பகலாக்கவல்ல
ஒளியுடைய;   பளிங்கு  அறை  -  பளிங்குப்  பறையால்  அமைந்த;
அமளிப்பங்கர் -  படுக்கையறையில்; மல் பக மலர்ந்த  - மல்லரும்
தோற்றோடும்படி   விரிந்த;    திண்தோள்   வானவர்   -   வலிய
தோள்களையுடைய  தேவர்களால்;  மணந்த  கோலம்  - கூடப்பெற்ற
அழகிய;   வில்   பகை  நுதலினார்  -  (புருவங்களால்)  வில்லோடு
பகைக்கும்  நெற்றியை  உடைய தெய்வப் பெண்கள்; தம் கலவியின் -
தமது புணர்ச்சிக் காலத்தில்  (இடையூறு  தந்தமையால்); வெறுத்து நீத்த
-  வெறுப்போடு  கழற்றியெறிந்த;  கற்பகம்  ஈன்ற  மாலை  - கற்பக
மலர்களால்   கட்டப்   பெற்ற  மாலைகள்;  கலனொடும்  கிடப்ப  -
அணிகலன்களோடு வீழ்ந்து கிடப்பதை; கண்டார் - பார்த்தார்கள். 

பளிங்குப்    பாறையிலே தேவர்களால் கூடப் பெற்ற தெய்வ மகளிர்
அந்த  வானவரைத்   தழுவுவதற்கு   இடையூறாக இருக்கின்றன என்று
கருதித்  தாம்  அணிந்திருந்த  கற்பக  மாலைகளையும்.  கலன்களையும்
வெறுத்து  எடுத்தெறிந்தனர் என்பது. வில்பகை  நுதலினார்:  வில்லோடு
உவமையில் வேறுபடும் நெற்றியர்.                             22