வரைக்காட்சிப் படலம் - 942

bookmark

942.

நிலமகட்கு அணிகள் என்ன
   நிரை கதிர் முத்தம் சிந்தி.
மலைமகள் கொழுநன் சென்னி
   வந்து வீழ் கங்கை மான.
அலகு இல் பொன் அலம்பி ஓடி.
   சார்ந்து வீழ் அருவி மாலை.
உலகு அளந்தவன்தன் மார்பின்
   உத்தரீயத்தை ஒத்த.
 
நிலமகட்கு   அணிகள்  என்ன - பூமிதேவிக்கு (இவை) அணிகள்
என்னும்படி;  நிரை  கதிர்  முத்தம்  - வரிசையான கதிர்களையுடைய
முத்துக்களை;  சிந்தி  மலைமகள்  கொழுநன் - சிதறி உமாதேவியின்
கணவனான சிவனது; சென்னி வந்து வீழ் - முடியில் வந்து விழுகின்ற;
கங்கை  மான - கங்கையைப் போல (வெண்ணிறத்தோடு); அலகு இல்
பொன்  -  அளவில்லாத  பொன்னை;  அலம்பி  ஓடி  - கொழித்துக்
கொண்டு  பெருகி;  சார்ந்துவீழ் அருவி  மாலை  -  முத்துக்களோடு
பொருந்தி ஓடிவரும் மலையருவியின்  வரிசை; உலகு அளந்தவன் தன்
- இந்த உலகத்தை அளந்தருளின திருமாலின்; மார்பின் உத்தரீயத்தை
- மார்பில் அணிந்த மேலாடையை; ஒத்த - ஒத்து விளங்கிற்று. 

சந்திர     சயில  மலை  உலகளந்த திருமாலை ஒத்துள்ளது. அதில்
பொன்னை    அலம்பியோடி   முத்தோடு  பொருந்திய  அருவிமாலை
அத்திருமால்  மார்பில்  அணிந்த   உத்தரீயத்தை   ஒக்கும் என்றார் -
தற்குிறிப்பேற்ற     உவமையணி.     மலையருவிகள்     பூமிதேவிக்கு
அணியாகுமாறு    முத்துக்களைச்     சிந்தும்     என்பது.    அருவி
வெண்ணிறத்தோடு வீழ்வதால் உத்தரீயத்திற்கு ஒப்பாயிற்று.          15