வரைக்காட்சிப் படலம் - 941

bookmark

941.

சாந்து உயர் தடங்கள்தோறும்
   தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம்
   குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக்
   கதிரொடும் கலந்து வீசச்
சேந்து. வானகம். எப்போதும்
   செக்கரை ஒக்கும் அன்றே.
 
சாந்து உயர் தடங்கள் தோறும்  -  சந்தன  மரங்கள் ஓங்கியுள்ள
மலைச் சாரல்கள் தோறுமுள்ள;  தாது  ராகத்தின் சார்ந்த -  காவிக்
கற்களின்     செந்நிறத்தோடு   பொருந்திய;   கூந்தல் அம் பிடிகள்
எல்லாம்   -   புறமயிருள்ள  பெண்யானைகள்  எல்லாம்;  குங்குமம்
அணிந்தபோலும்  -  குங்குமக்  குழம்பு  அப்பியவற்றை  ஒத்துள்ளன;
காந்து  இன  மணியின் சோதி - ஒளி விடுகின்ற பதுமராகக் கற்களின்
செந்நிற  ஒளியானது;  கதிரொடும் கலந்து பூச - சூரியன் கதிர்களோடு
சேர்ந்து  செந்நிறத்தைப் பூச; வான் அகம் எப்போதும் - வானமானது
எப்பொழுதும் செந்நிறமடைந்து; செக்கரை ஒக்கும் - செவ்வானத்தைப்
போலும். 

செவ்வானம்     மாலைக்   காலத்தில்தான்   தோன்றும்.  ஆனால்.
மலையிலுள்ள    பதுமராக    மணியொளி    சூரியக்    கதிர்களோடு
மேலிடமெங்கும்   பரவியிருப்பதால்   பகலிலும்    அச்   செவ்வானம்
தோன்றுவதாயிற்று  என்பதாம்.   தாதுராகம்:  காவிக்கல்லின்  செந்நிறம்.
காவிக்  கற்களில்  சார்வதால்  கரிய  யானைகள் குங்குமக் குழம்பு பூசப்
பெற்றார்போலத்   தோன்றும்  என்பது.  பிறிதின் குணம் பெறலணியும்.
உவமையணியும் சேர்ந்து வந்துள்ளன.                          14