லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

bookmark

லால் பகதூர் சாஸ்திரி...!!


👉 லால் பகதூர் சாஸ்திரி 1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தற்போ​தைய உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் ஷரதா பிரசாத் ஸ்ரீவாஸ்தவா, ராம்துலாரி தேவி என்ற தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். லால் பகதூர் சாஸ்திரியின் மூத்த சகோதரி கைலாஷி தேவி ஆவார்.

👉 அவருக்கு பெற்​றோர் வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா என்பதாகும். இவரின் தந்தை ஷரதா பிரசாத் ஓர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.

👉 லால் பகதூர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது கங்​கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்துவிட்டார்.

👉 இடையருக்கு குழந்தை இல்லை என்பதால், இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார்.

👉 குழந்தையை காணாத அவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டுபிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்த்தனர்.

👉 1906ஆம் ஆண்டில், லால் பகதூர் சாஸ்திரி சிறுகுழந்தையாக இருக்கும்போது, அவரது தந்தை ஷரதா பிரசாத் புபோனிக் பிளேக் (Bubonic plague) தொற்றுநோயால் இறந்துவிட்டார்.

👉 அச்சமயத்தில் லால் பகதூரின் தாய் கர்ப்பமாக இருந்தார். தன் கணவர் இறந்தபின் ராம்துலாரி தேவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, ராம்நகரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

👉 1906ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ராம்துலாரி தேவிக்கு மூன்றாவது மகள் பிறந்தார். அவளுக்கு சுந்தரி தேவி என பெயர் சூட்டினர்.

👉 லால் பகதூர் சாஸ்திரி, அவரது சகோதரிகளும் தாய்வழி தாத்தாவான ஹசாரி லால்ஜியின் வீட்டில் வளர்ந்தனர்.

👉 1908ஆம் ஆண்டில் ஹசாரி லால்ஜி பக்கவாதத்தால் இறந்துவிட்டார். அதன் பிறகு லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தை ராம்துலாரி தேவியின் சகோதரர் தர்பாரி லால் கவனித்து கொண்டார்.

👉 லால் பகதூரின் பள்ளி வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது.

லால் பகதூர் சாஸ்திரியின் பள்ளிப்பருவம் :

👉 லால் பகதூரின் தாத்தா இறந்த பின் அவருடைய குடும்பத்தை அவரின் தாயான ராம்துலாரி தேவியின் சகோதரர் தர்பாரி லால் கவனித்தார். அவர் காசிப்பூரில் எழுத்தராக இருந்தார். இவரது மகன் பிந்தேஸ்வரி பிரசாத் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.

👉 லால் பகதூர் சாஸ்திரி முகல்சராயில் உள்ள கிழக்கு மத்திய ரயில்வே இன்டர் கல்லூரியில் தனது நான்கு வயதில் கல்வியை தொடங்கினார். அங்கு அவர் ஆறாம் வகுப்பு வரை படித்தார்.

👉 1917ஆம் ஆண்டில், பிந்தேஸ்வரி பிரசாத் வாரணாசிக்கு மாற்றப்பட்டார். அதன்பின் லால் பகதூர் சாஸ்திரியின் முழு குடும்பமும் அங்கு சென்றது. லால் பகதூர் சாஸ்திரி வாரணாசியில், ஹரிஷ் சந்திர உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார்.

👉 கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார்.

👉 வாரணாசியில் இருந்தபோது ஒருமுறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறுகரையில் நடந்த சந்தையை பார்க்க சென்றார். திரும்பும்போது படகிற்கு கொடுக்க போதிய பணம் இல்லை. எனவே, நண்பர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக ஆற்றை நீந்திக் கடந்து வந்தார்.

👉 மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குருநானக்கின் வரிகளின் மீது பிரியமாக இருந்தார்.

👉 சுதந்திர இயக்கத்துடன் லால் பகதூர் சாஸ்தியின் குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், ஹரிஷ் சந்திர உயர்நிலைப்பள்ளியில் அவரது ஆசிரியரான நிஷ்கேமேஸ்வர் பிரசாத் மிஸ்ரா என்பவர் தீவிர தேசபக்தி மற்றும் மிகவும் மரியாதைக்குரிய ஆசிரியராக இருந்தார்.

👉 அவர் சாஸ்திரிக்கு மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கினார். மிஸ்ராவின் தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட சாஸ்திரி சுதந்திரப் போராட்டத்தில் ஆழ்ந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.

👉 மேலும் சுவாமி விவேகானந்தர், காந்தி மற்றும் அன்னிபெசண்ட் உள்ளிட்ட பல பிரபலங்களின் படைப்புகளை படிக்க தொடங்கினார்.

👉 லால் பகதூர் அவர்கள் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான சுதந்திர போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். லால் பகதூர் அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரரான பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார்.

👉 இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது.

👉 1915ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தியடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார்.

👉 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்தபோது லால் பகதூருக்கு 16 வயதுதான் ஆனது. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார்.

👉 இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. மேலும் இந்த முடிவை அவரது குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தனர். ஆனால், லால் பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

👉 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியபோது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது லால் பகதூருக்கு இல்லாததால் அரசு இவரை கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது.

👉 லால் பகதூர் சாஸ்திரியின் மேற்பார்வையாளரான முன்னாள் பெனாரஸ் இந்து பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜே.பி.கிருபலானி, இந்திய சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், காந்தியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.

👉 இளைய தன்னார்வலர்கள் தங்கள் கல்வியை தொடர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, கிருபலானியும் மற்றும் அவரது நண்பர் வி.என்.சர்மாவும் இணைந்து 'தேசியவாத கல்வியை' மையமாகக் கொண்ட பள்ளியை நிறுவினார்.

👉 1921ஆம் ஆண்டில், வாரணாசியில் காஷி வித்யாபித்தை தேசிய உயர்கல்வி நிறுவனமாக காந்தி திறந்து வைத்தார்.

👉 இதில் முதல் மாணவனாக 1925ஆம் ஆண்டில் வித்யாபித்தில் தத்துவம் மற்றும் நெறிமுறைகளில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார் லால் பகதூர் சாஸ்திரி.

👉 லாலா லஜ்பதி ராய் நிறுவிய மக்கள் சங்கத்தின் லோக் சேவக் மண்டல் (Lok Sevak Mandal) வாழ்க்கை உறுப்பினராக லால் பகதூர் சாஸ்திரி தன்னை சேர்த்துக் கொண்டார்.

லால் பகதூர் சாஸ்திரியின் திருமண வாழ்க்கை :

👉 ஒரு மணிக்கூண்டில் சுதந்திர கொடியேற்றும் போராட்டத்தில், கடும் போலீஸ் நெருக்கடியிலும் தந்திரமாக அந்த கூண்டில் ஏறி கொடியேற்றினார் லால் பகதூர் சாஸ்திரி. அங்கே மகளிர் அணியில் கொடிப்பிடித்த லலிதா தேவி அதனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார். நாட்டுப்பற்று உடைய இருவருக்கும் அத்தருணத்தில் காதல் உருவானது.

👉 1928ல் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், லலிதா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, உத்திரப்பிரதேசத்திலுள்ள மிர்சாபூர் நகரத்தை சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விஷயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது.

👉 திருமணத்தின்போது, லால் பகதூர் சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும், ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார். மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

👉 லால் பகதூர் சாஸ்திரி, லலிதா தேவி தம்பதியினருக்கு

👉 குசும் சாஸ்திரி

👉 சுமன் சாஸ்திரி என இரு மகள்களும்

👉 ஹரி கிருஷ்ணா சாஸ்திரி

👉 அனில் சாஸ்திரி

👉 சுனில் சாஸ்திரி

👉 அசோக் சாஸ்திரி என நான்கு மகன்களும் பிறந்தனர்.

👉 லால் பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

👉 அப்​போது இவரு​டைய மகளுக்கு உடல்நலம் மிக மோசமானதால், லால் பகதூர் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார்.

👉 ஆனால், அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவருடைய மகள் இறந்துவிட்டார். லால் பகதூர் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு 15 நாட்கள் முடிவதற்கு முன்​னர் தாமாகவே சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டார்.

👉 அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு காய்ச்சல் என்றதால் ஒரு வாரம் சி​றையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினார். ஆனால், மகனுக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகாததால் லால் பகதூர் சாஸ்திரி குடும்ப உறுப்பினர்கள் கூறிய​தை மீறிச் சிறைச்சாலைக்கு திரும்பினார்.

👉 தனக்கு சலு​கை கி​டைக்கிற​தே என்பதற்காக வீணாக அ​தைப் பயன்படுத்தாமல் எந்த ​செயலிலும் லால் பகதூர் சாஸ்திரி ​நேர்​மை தவறாது நடந்து ​கொண்டார்.

அமைச்சரான லால் பகதூர் சாஸ்திரி :

👉 1937ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியில் அமர்ந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

👉 1940ஆம் ஆண்டில் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்தியாக்கிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.

👉 1942ஆம் ஆண்டு காந்தியடிகள் ​வெள்​ளைய​னே ​வெளி​யேறு இயக்கத்​தை தொடங்கினார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரினார். ஒரு வருடம் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த சாஸ்திரி, அலகாபாத் பயணம் செய்தார். ஜவஹர்லால் ​நேருவின் ஆனந்தபவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக அறிவுறுத்தல்களை ஒரு வார காலத்திற்குள் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கினார்.

👉 அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1946ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் சிறையிலேயே கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களை படித்தார்.

👉 மேற்கத்திய தத்துவ ஞானிகள், புரட்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரை பற்றி நன்கு அறிந்து கொண்டார். இந்த சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.

👉 இந்திய விடுதலைக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி உத்தரப்பிரதேசத்தின் பாராளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் காவல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

👉 போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த​போது இவரே முதன்முதலில் பெண்களை நடத்துனராக நியமனம் செய்தார். மேலும், கட்டுப்பாடற்ற கூட்டத்தை கலைப்பதற்கு தடியால் அடிப்பதற்கு பதிலாக நீரைப் பீய்ச்சி அடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

👉 லால் பகதூர் சாஸ்திரி கடின உழைப்புக்கும், திறமைக்கும் மறுபெயராக திகழ்ந்தார்.

👉 லால் பகதூர் சாஸ்திரி, 1951ஆம் ஆண்டில் காங்கிரஸ் செயற்குழுவுக்கு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தார். வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பாளராக இருந்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார்.

👉 1951-1956 வரையிலான காலங்களில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி பணிபுரிந்தார். அப்போது 1956ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மெகபூப் நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை விலக முன்வந்தார் லால் பகதூர் சாஸ்திரி. எனினும் நேரு இதற்கு தாங்கள் பொறுப்பல்ல, மீண்டும் ஒருமுறை தவறு நடந்தால் அப்போது பதவி விலகலாம் என்று கூறி இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை.

👉 மூன்று மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்ததை தொடர்ந்து சாஸ்திரி தனது பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். அப்போது பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் நேரு.

👉 இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாத இச்சம்பவத்தால் நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது. அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால் பகதூர் சாஸ்திரியின் நேர்மையையும், உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார். இந்த சம்பவத்திற்கு லால் பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

👉 ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால் பகதூர் சாஸ்திரி, உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

👉 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி மத்திய அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அவர், பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1961-ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது ஊழல் தப்பு குழு அமைவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்தியாவின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி :

👉 லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொதுச்சேவையில் அர்ப்பணித்து கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும், சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார்.

👉 ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாளில் மறைந்ததை தொடர்ந்து அடுத்த பிரதமர் யார்? என்று ஒரு கேள்வி எழுந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார்.

👉 ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் 15 மாநில முதலமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டார்.

👉 பெரும்பான்மையோர் விருப்பப்படி 'லால் பகதூர் சாஸ்திரி'யை பிரதமராக, காமராஜர் அறிவித்தார். இடைக்கால பிரதமர் நந்தா முன்மொழிய, மொரார்ஜி தேசாய் வழிமொழிய 2-வது இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉 ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகவும் கஷ்டப்பட்டு படித்து, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற ஒரு நேர்மையான மாமனிதரை இந்தியப் பிரதமராக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டு உலகமே வியந்து பாராட்டியது.

👉 நேருவின் கொள்கையை உடையவரும், சமதர்மவாதியும், நேர்மையாளருமான இவரது தன்மையான பாங்கும், பேச்சும், பழமையை விரும்பும் பண்பும் இவரது செல்வாக்கினை அதிகமாக்கியது. இவரது நேர்மைதான் இவர் பிரதமராக உயர்வதற்கு காரணமாக அமைந்தது.

👉 குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை.

👉 இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சியின் மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கு அதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது.

👉 பசுமை புரட்சியை இவர் வலியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் இவர் ஊக்கப்படுத்தினார். 1964ஆம் ஆண்டு கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக குஜராத்தில் உள்ள கஞ்சரிக்கு சென்றார். அப்போது பால் வளம் பற்றி சிறப்பான கருத்து இவருக்கு உருவாயிற்று.

👉 அங்கு வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் போர் :

👉 இந்திய அரசிற்கு, பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது.

👉 ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டத்தின்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50 சதவீதத்திற்கு பதிலாக 10 சதவீதம் கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது.

👉 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது.

👉 இப்பிரச்சனையை காரணம் காட்டி பாகிஸ்தான், இந்தியாவின் மீது திடீரென்று போர் தொடுத்தது. காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில் 3 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் ஆயுதம் தாங்கி 'கொரில்லா போரை' தொடங்கினர். இந்திய ராணுவப்படை ஒரே நேரத்தில் மும்முனை தாக்குதலை நடத்தியது.

👉 அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கான் இந்தியாவிற்கு எதிராக செப்டம்பர் 5ஆம் தேதி போர் பிரகடனம் செய்தார். பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும், ஆயுத அதிகாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அனைவரும் இந்திய அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர்.

👉 ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது. மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை விரட்டியது.

👉 போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.

👉 இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோது சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது.

👉 சீனா இந்தியாவிற்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது.

👉 சீனாவின் இப்பயமுறுத்தலை கண்டு சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா, இந்தியாவை தாக்குமானால் இந்தியாவின் விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம், 'சீனராயினும், வேறு எந்த ஈனராயினும் எதிர்ப்போம்' என்ற சாஸ்திரியின் வார்த்தை உலக நாடுகளையே அதிரவைத்தது.

👉 அதன்பின் சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த சேதங்களை உண்டாக்கியது.

👉 சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது, இந்திய வீரர்களும், விமானப்படையினரும் பாகிஸ்தான் இராணுவத் தளங்களை அழித்தனர். 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி ஐ.நா.சபை கூடி, இருதரப்பினரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று கூறியது.

👉 இந்தியா-பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23, 1965ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணையின் மூலம் முடிவுக்கு வந்தது.

👉 அப்போது லால் பகதூர் சாஸ்திரி 'ஜெய் ஜாவான்' 'ஜெய் கிஷான்' (வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி) என முழக்கமிட்டார். பாகிஸ்தான்-இந்தியா பிரச்சனையை தீர்த்து வைக்க ரஷ்யா விரும்பியது. அதனால் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

👉 அழைப்பை ஏற்று 1966 ஜனவரி 4ஆம் தேதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரஷ்யா சென்றார் லால் பகதூர் சாஸ்திரி. அதேபோல் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் சென்றார். 'தாஷ்கண்ட்' நகரில் அரசு மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

👉 இருவரும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர். முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அதன்பின்னர் ரஷ்ய பிரதமர் 'கோசிஜின்' அயூப்கானிடம் 3 மணி நேரமும், சாஸ்திரியிடம் 2 மணி நேரமும் தனித்தனியாக பேசினார்.

👉 சமாதானத்திற்கு வேண்டிய சில ஆலோசனைகளை வழங்கினார். இருவரும் சில வி‌ஷயங்களை ஒத்துக்கொண்டனர். சீனாவின் மிரட்டலால் பேச்சுவார்த்தை தடைபட்டது. உடன்படிக்கை இழுபறியில் இருந்தது.

👉 ஜனவரி 10, 1966-ல் தாஷ்கண்டில் இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுக்குள் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இருவரும் கையெழுத்திட்டனர். அன்று இரவு ரஷ்ய பிரதமர் அளித்த விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

👉 ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த அமைச்சருக்கு தொலைப்பேசியின் வழியே செய்தியை கூறினார் லால் பகதூர் சாஸ்திரி. இருவரும் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

👉 பின்னர் லால் பகதூர் சாஸ்திரி டெல்லியில் இருந்த தன் மனைவி லலிதா தேவியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு 'பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.

லால் பகதூர் சாஸ்திரியின் மறைவு :

👉 நள்ளிரவு மூன்று மணி (அப்போது இந்திய நேரப்படி சுமார் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்பு தளர்ந்திருந்தது. பல மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி லால் பகதூர் சாஸ்திரியை மரணம் அள்ளிக் கொண்டது.

👉 உயிர் பிரிவதற்கு முன் சாஸ்திரியின் உதடுகள் 'ஹரே ராம்' என்ற வார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷ்ய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

👉 தாஷ்கண்டில் இருந்து சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

👉 சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்த மாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

👉 ரஷ்ய பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரியின் உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம் பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

👉 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசிஜின்னும் தோள் கொடுத்து சுமந்தனர்.

👉 இதுதான் விந்தையிலும் விந்தை...! பகைமை பாராட்டிய பாகிஸ்தான் அதிபர் கண்ணீர் மல்க சாஸ்திரியின் உடலை சுமந்தது அனைவரது உள்ளத்தையும் உருக்கிவிட்டது. பகைவரின் உள்ளத்தைக்கூட நெகிழ வைத்த நேர்மையாளராக சாஸ்திரி திகழ்ந்ததை இதன் வாயிலாக நாம் அறியலாம்.

👉 இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உடலை, ரஷ்ய பிரதமர் கோசிஜினும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் தோள்களில் சுமந்து வந்து விமானத்தில் ஏற்றி இறுதி மரியாதை செலுத்தினர். நாடே சோகத்தில் மூழ்கியது.

👉 தனி விமானத்தின் மூலம் லால் பகதூர் சாஸ்திரியின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் உடலை பெற்றுக்கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார்.

👉 லால் பகதூர் சாஸ்திரியின் மரண செய்தியை அறிந்ததும், அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் விமானத்தின் மூலம் டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேர்வதற்கு முன்பே டெல்லியை அடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார் காமராஜர்.

👉 அமைச்சர்கள், தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், சாஸ்திரி குடும்பத்தினர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். சாஸ்திரி உடலுடன் தனி விமானம் பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தது.

👉 சாஸ்திரியின் உடலை இறக்க, 6 ராணுவ அதிகாரிகள் விமானத்திற்குள் சென்றனர். சாஸ்திரி அவர்களின் உடல், பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அவர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

👉 கணவரின் உடலை பார்த்து லலிதா சாஸ்திரி கதறி அழுதார். பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் நேர்மைமிகு தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மறுநாள், யமுனை நதிக்கரையில் சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

👉 இறுதிச் சடங்கிற்கு ரஷ்ய பிரதமர் கோசிஜின், அமெரிக்க துணை குடியரசு தலைவர், ராணி எலிசபெத்தின் தூதரான மவுண்ட்பேட்டன் பிரபு, இங்கிலாந்து உதவிப்பிரதமர், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் மற்றும் பல அயல்நாட்டு தலைவர்கள் பலரும் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

👉 இந்திய மக்கள் ஒரு நேர்மையானவரை இழந்துவிட்டோமே என்று எண்ணி கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தினர்.

👉 இவரது எளிமை, நேர்மை, அஞ்சாமை, மக்களின் துயரை துடைக்க உடனடி நடவடிக்கை, மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த குணம் போற்றுதலுக்குரியது. பிரதமர்களுக்கு எல்லாம் இவர் ஓர் வழிகாட்டியாக திகழ்ந்தவர். லால் பகதூர் சாஸ்திரி நம் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்.