வரலாற்று ஆதாரம்
1) பிளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus): இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின் போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். இவர் எழுதிய யூத மரபு வரலாறு (Jewish Antiquities) என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான் பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:
"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார். இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும். மக்கள் நற்பண்புடையவராக, ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும், கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து, அவனைத் தண்டித்தார்; அது நியாயமானதே".
2) பிளாவியுசு யோசேஃபசு இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்:
"ஏறக்குறைய அச்சமயத்தில் "இயேசு" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை மனிதர் என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு கிறித்தவர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்".
3) பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு: யோசேஃபசு எழுதிய யூத மரபு வரலாறு நூலின் அரபி மொழிபெயர்ப்பு ஒன்றுளது. அது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அந்த மொழிபெயர்ப்பில் மேலே காட்டிய பகுதி கீழ்வருமாறு உள்ளது: "அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்த பின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."
