குறிப்பு - 1
மேலே தரப்பட்ட பகுதியிலும் அதன் அரபி மொழிபெயர்ப்பிலும் ஒரு சில கிறித்தவ இடைச்செருகல்கள் இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு என்னும் பெயருடைய ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்றும், அவர் மக்களுக்குப் போதனை வழங்கி அதிசய செயல்கள் புரிந்தார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும், நூல் எழுந்த முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றிய மக்கள் குழுக்கள் இருந்தன என்றும் யாதொரு ஐயத்திற்கு இடமின்றி வரலாற்று உண்மையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது விவிலியத்திற்கு வெளியே இருந்து வருகின்ற உறுதிப்பாடு என்பது கருதத்தக்கது.
4) பிளாவியுசு யோசேஃபசு இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) பற்றிய தகவலும் தருகிறார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 20, அதிகாரம் 9. இப்பகுதியை எழுதியவர் யோசேஃபசு தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து.
மேற்கோள்: "பெசுதுசு (Festus) இறந்துவிட்டார் என்று கேட்டதும் சீசர் அல்பீனுசு (Albinus) என்பவரை யூதேயாவுக்கு ஆளுநராக அனுப்பினார்....ஃபெசுதுசு இறந்தாயிற்று, அல்பீனிசு பயணமாகப் போகிறார் என்ற நிலையில், அவர் [அனானுசு Ananus] நீதித்தலைவர்கள் அடங்கிய மூப்பர் சங்கத்தை (Sanhedrin) கூட்டினார். அவர்கள் முன்னிலையில் யாக்கோபையும் அவர்தம் கூட்டாளிகளையும் கொண்டுவந்தார். கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரர்தான் யாக்கோபு. அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்னும் குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது; அவர்கள் கல்லால் எறியப்படவேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டது. சட்டத்தை மீறியது தவறு தான் என்றாலும் அதற்கென்று அளிக்கப்பட்ட தண்டனை நீதியாக இருக்கவில்லை என்று நீதி நேர்மை கொண்ட குடிமக்கள் நினைத்தது போலத்தான் தெரிகிறது."
5) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) வழங்கும் சான்று: தாசித்துசு தலைசிறந்த உரோமை வரலாற்றாசிரியர். மிகவும் நம்பத்தக்கவராகக் கருதப்படுபவர். கி.பி. 116ஆம் ஆண்டளவில் அவர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூல் இவருடைய தலைசிறந்த படைப்பு ஆகும். நீரோ மன்னன் கி.பி. 64 ஆம் ஆண்டு உரோமை நகருக்குத் தீ வைத்தார் என்னும் தகவலையும், அத்தீ ஆறு நாள்கள் எரிந்து ஓய்ந்தது என்னும் தகவலையும், தீ வைத்தவர்கள் கிறித்தவர்களே என்று குற்றம் சாட்டி அவர்களை நீரோ கொன்ற தகவலையும் தாசித்துசு தருகிறார். தாசித்துசு தாம் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூலில் 15 ஆம் பிரிவின் 44 ஆம் பகுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:
"தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர் மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறெஸ்தவர்கள் (Chrestians = கிறிஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு (Tiberius) ஆட்சிக்காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடு நிறைந்த மூடநம்பிக்கை [= கிறித்தவ சமயம்] சிறிது காலம் அடக்கி வைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே".
