குறிப்பு - 2
மேலே காட்டிய பகுதியில் தாசித்துசு Chrestianos என்று இலத்தீனில் குறிப்பிட்டது கருதத்தக்கது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் என்பது இலத்தீனில் Christiani, Christianos என்று தான் வரும்.
பெரும்பான்மையான அறிஞர்கள் மேற்காட்டிய பகுதி தாசித்திசு என்னும் பண்டைக்கால உரோமை வரலாற்றாசிரியரால் எழுதப்பட்டதே என ஏற்கின்றனர். ஒருசிலர் ஐயப்படுகின்றனர். ஆனால், கிறித்தவ சமயத்தை கேடு நிறைந்த மூடநம்பிக்கை என்றும், தீங்கு, வெறுக்கத்தக்கது, வெட்கக்கேடானது என்றெல்லாம் இழிவாக இப்பகுதி காட்டுவதால் இது கிறித்தவர்களால் புகுத்தப்பட்ட இடைச்செருகல் அல்ல என்று மிகப்பெரும்பான்மை அறிஞர் உறுதியாகக் கூறுகின்றனர்.
6) மேலே காட்டியவை தவிர, இளைய பிளினி (Pliny the Younger) என்னும் உரோமை அறிஞர் இயேசு கிறித்து மற்றும் தொடக்ககாலக் கிறித்தவர் பற்றித் தருகின்ற குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் வாழ்ந்த காலம் கி.பி. 61-112. இவர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் எத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்து உரோமைப் பேரரசனான திரேயன் (Trajan) என்பவருக்கு எழுதிய கடிதமும் அதற்கு அரசன் கொடுத்த பதிலும் குறிப்பிடத்தக்கவை .
7) லூசியன் (Lucian) என்னும் பண்டைய அசீரிய எழுத்தாளர் (கி.பி. சுமார் 125 - கி.பி. சுமார் 180) இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்றும், இயேசு எல்லா மனிதரும் சகோதரர்களே என்று போதித்தார் என்றும், கிறித்தவர்கள் பொதுவுடைமை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தகவல் தருகிறார்.
இயேசு பற்றிய பிற விளக்கங்கள்:-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
மேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். "இயேசு பற்றிய விமர்சனம்" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி கிறித்தவ தன் விளக்கம் என்று அழைக்கப்படுகிறது.
முதன்மைக் கட்டுரை: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு
