லீவன் ஹாக்
அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படும் நுண்ணோக்கியை (microscope) கண்டு பிடித்தவர் தான் லீவன் ஹாக். இவர் 1632 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் பிறந்தார். தனக்கே இருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக பள்ளிப் படிப்பில் அதிக கவனம் இல்லாமல் இருந்தார். பின்னர் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால், நேரம் கிடைக்கும் போது தனது பொழுது போக்காக நல்ல புத்தகங்கள் படிப்பதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். அவரது ஆராய்ச்சி அறிவு நாளடைவில் நன்கு வளர்ந்தது. விளையாட்டாக (மிகச் சிறிய பொருளை பெரிது படுத்தி அதன் அழகை ரசிக்கும் நோக்கத்தில்) வெகு நாட்கள் பாடுபட்டு லென்ஸ் ஒன்றைக் கண்டு பிடித்தார். அந்த லென்சைக் கொண்டு கண்களில் படும் பொருட்களை எல்லாம் பார்க்கத் தொடங்கினார். ஒவ்வொரு முறையும் லென்சுகளைக் கொண்டு ஒரே பொருளை திரும்பத் திரும்ப பார்த்தார். ஒவ்வொரு முறையும் அதே பொருளை பார்த்தாலும், அவர் லென்ஸ் வழியாகப் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் புதிய பரிமாணத்தில் அந்தப் பொருள்கள் அவருக்குத் தென்பட்டன. இதனால், மிகுந்த ஆச்சர்யம் அவருக்கு ஏற்பட்டது.
அவரது கண்டுபிடிப்பான அந்த லென்சைப் பற்றி ராயல் கழகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. ராயல் கழகத்தினர் அதன் விவரத்தை கேட்டனர். தனது ஆராய்ச்சியை விவரமாக ராயல் கழகத்திற்கு அனுப்பி வைத்தார் லீவன் ஹாக், அவர்கள் இவரது ஆராய்ச்சியைப் போற்றிப் புகழ்ந்தனர். இதே போல மழை நீர்த் துளிகளைப் பற்றி ஆராய வேண்டும் என்று லீவன் ஹாக் விரும்பினார். தொட்டியில் தேங்கி நிற்கும் மழைத் துளிகளில் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்ற நுண்ணிய உயரினங்கள் இருப்பதை அந்த லென்ஸ் மூலமாகக் கண்டறிந்தார். ஆனால், அதே சமயத்தில் நேரடியாக விழுந்த மழைத்துளிகளை சுத்தமான ஒரு குடுவையில் சேகரித்து, அதே லென்ஸ் கொண்டு மீண்டும் பார்த்தார். இப்போது அந்த மழைத் துளியில் கிருமிகள் ஏதும் இல்லை, என்பதை கண்டறிந்தார். இந்த சிறு ஆய்வின் மூலம் வானத்தில் இருந்து நேரடியாக வரும் மழைத் துளிகளில் கிருமிகள் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார். அதுபோல, மனிதனின் பற்களை தினமும் இயன்ற வரை சுத்தம் செய்யா விட்டால், அது கிருமிகளின் இருப்பிடமாக இருக்கும் என்பதையும், மனித உடலை சுத்தம் செய்தாலும் அதில் அனுதினமும் ஏராளாமான கிருமிகள் வந்து போகிறது என்பதையும் கண்டு பிடித்தவர் இவர். சூடான நீருக்கு கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உண்டு என்பதை கண்டு பிடித்தார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த லீவன் ஹாக் தனது சொந்த முயற்ச்சியாலும் ஆர்வம், உழைப்பு, தன்னம்பிக்கையினாலும் அறிவியல் மேதையாக உயர்ந்தவர். லீவன் ஹாக்கை ரஷ்ய நாட்டின் மன்னரான பீட்டர், இங்கிலாந்து நாட்டு அரசி ஆகியோர் (அவரது அறிய கண்டு பிடிப்புக்காக) பாராட்டினார்கள். இன்றைய காலத்திலும் அவர் கண்டு பிடித்த "நுண்ணோக்கி" பேர் உதவி புரிகிறது. செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் இக்கருவி பயன்பட்டு வருகிறது. இப்படிப் பட்ட அறிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு தந்த லீவன் ஹாக் தனது 91 ஆவது வயதில் 1723 ஆம் ஆண்டு மறைந்தார்.
