ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், உர்டன்பர்க்கிர்க்கு அருகில் உள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச்.அவர் பியானோ வாசிப்பதில் கெட்டிக்காரர். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்கள்.
இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். 1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாவை விவாகம் செய்துகொள்ளாமலே, அவர்மூலம், லிசேர்ள் என்னும் ஒரு மகள் 1902ல் பிறந்தார்.
படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் மூலம், 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக தற்காலிக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.
ஐன்ஸ்டீன் எப்போதும் ஒரு குறிப்பேட்டை வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்.மனதில் தோன்றும் விஷயங்களைக் குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொள்வார். ஜூரிச் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்தை தனது 26 ஆம் வயதில் பெற்றார்.1905 ஆம் ஆண்டு சார்பு நிலைக் கொள்கையை வெளியிட்டார்.அதன் மூலம் உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. பிறகு தனது கடும் முயற்சி மற்றும் திறமையால் 1909 ஆம் ஆண்டு ஜூரிச் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியர் பதவியைப் பெற்றார்.
பொட்டாசியம், டங்க்ஸ்டன் ஆகிய உலோகங்களின் மீது ஒளி படும் போது அந்த உலோகங்கள் எலக்ட்ரான்களை வெளிப்படுத்துகின்றன. இதற்கு போட்டோ எலக்ட்ரான்கள் என ஐன்ஸ்டீன் பெயரிட்டார். அந்த ஒளியானது, போட்டான்கள் எனக் கூறப்படும் துகள்கள் வடிவில் பாய்கிறது என்பதையும் ஐன்ஸ்டீன் உறுதிப் படுத்தினார்.
அது ஒரு கிறிஸ்துமஸ் காலம், ஐன்ஸ்டீன் வீட்டிற்கு சில இளைஞர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிய படி வந்தனர்.அந்தப் பாடலை ரசித்துக் கேட்ட படி அறையை விட்டு வெளியில் வந்தார் ஐன்ஸ்டீன்.பாடல் முடிந்ததும் ஒரு சிறுவன் ஐன்ஸ்டீனிடம் அன்பளிப்பு தருமாறு கேட்டான்.
" தம்பி...இங்கேயே நில். இதோ வந்து விடுகிறேன்" என்று கூறிய படி ஐன்ஸ்டீன் வீட்டிற்குள் சென்றார்.அன்பளிப்பு கேட்ட சிறுவனோ ஐன்ஸ்டீன் பணத்துடன் வருவார் எனக் காத்துக் கொண்டு இருந்தான்.
வீட்டுக்குள் இருந்து வந்த ஐன்ஸ்டீன் பழைய குல்லாய் ஒன்றையும், ஒரு வயலினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.
" தம்பி போகலாம். வாங்க... உங்களுடன் சேர்ந்து நானும் வயலின் வாசிக்க வருகிறேன்.. கிடைக்கிற பணத்தில் ,என்னோட பங்கை கொடுத்து விட வேண்டும்" என்று சிரித்தபடியே சொன்னாராம்.
1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.பணத்தை நான் விரும்பாத நிலையில் அது என்னைத் தேடி வருகிறது என கருத்துத் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.வந்த பணத்தில் பாதித் தொகையை அறப்பணிகளுக்கு வழங்கினாராம். மீதி பணத்தை தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வைத்துக் கொண்டாராம். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை சேர்ந்தவர் என்றாலும், இறுதிவரை அமெரிக்காவில் தான் வசித்து வந்தார். அப்போது உலக யுத்தம் நடந்து வந்த காலம்.ஜெர்மனிக்கு, அமெரிக்காவைக் கண்டாலே பிடிக்காத நேரம்.ஜெர்மன்காரர் ( ஐன்ஸ்டீன்) ஒருவர் தனது கண்டுபிடிப்புகளை அமெரிக்காவுக்கு தருகிறார் என்ற எரிச்சலில், சில நாசிகள், ஐன்ஸ்டீன் அவர்களுக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு பழைய பூர்விகப் பண்ணை வீட்டை கொளுத்தினர்.கடும் எதிர்ப்பை அதன் மூலம் ஐன்ஸ்டீனுக்கு வெளிப்படுத்தினார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைப் படாத ஐன்ஸ்டீன், தனக்கு புகழிடம் கொடுத்த அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்தார். அதன் காரணமாக அப்போது அமெரிக்க அதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் அணுகுண்டு தயாரிப்பு வல்லுநர் குழுவில் ஐன்ஸ்டீனை நியமித்து பெருமைப் படுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் விளைவைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார் ஐன்ஸ்டீன்.அது முதல் கொண்டு அணுவின் ஆற்றலை அமைதிப் பணிக்கும், ஆக்க பூர்வமான காரியங்களுக்கும் மட்டுமே செலவிட வேண்டும் என அறிவுறுத்தினார் .பேராசிரியர் பணியில் இருந்து 1945 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னும் தனது அறிவியல் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார் ஐன்ஸ்டீன்.இவ்வளவு பெரிய மேதை 1955 ஆம் வருடம் ஏப்ரில் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.பிரின்ஸ்டன் மருத்துவமனையில் உறங்கிக் கொண்டு இருந்த போதே அவரது உயிர் பிரிந்தது.அப்போது அவருக்கு வயது 76.ஐன்ஸ்டீன் இறந்த பிறகு அவரது மூளை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டது.பின்னர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னாளில் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி என்று போற்றப்பட்டார் அவர்.
