ரூஸோ

bookmark

கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ போற்றப்படுகின்றார். இவர் தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர். இவர் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் 1712 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் நாள், ஐயசக்ரூசோ - சூசன்னே பெர்னாட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

இவர் பிறந்த ஒரு வாரத்தில் தாயாரை இழந்தார்.தாய் ஸ்தானத்தில் இருந்து கொண்டு இவரது தந்தை இவரைக் கவனித்துக் கொண்டார். இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது தந்தையிடம் இருந்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.தந்தையின் மூலமே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இவருக்கு வந்தது. கிரேக்கர்களின் காவியங்களையும், ரோமாபுரியின் வரலாற்றையும் ஆர்வத்துடன் படித்தார் அதன் மூலம் தான் ஏன் ஒரு எழுத்தாளராக மாறக் கூடாது என்ற எண்ணம் இவருக்கு வந்தது.

சூழ்நிலை காரணமாக, ரூசோவின் தந்தையால், ரூசோவை சரியான முறையில் வளர்க்க முடியவில்லை.அதனால், தனது உறவினர் " பெர்னாட்" என்பவரிடம் ரூசோவை ஒப்படைத்தார். அடிப்படையில் " பெர்னாட்" ஒரு நல்ல மனிதராகத் திகழ்ந்தார். தனது மகனுடன் ரூசோவையும் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.

இள வயதில், லத்தின் மொழியை கற்பிக்க அப்பள்ளியால் நியமிக்கப்பட்ட பாதிரியார் மாணவர்களிடம் அதிக கண்டிப்புடன் நடந்து கொண்டார்.தனது சக மாணவத் தோழர்களை அடித்து துன்புறுத்துவதை (அந்த வயதிலேயே) ரூசோவால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அப்பாதிரியாரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார். இதனால் அவரது கல்விப் படிப்பு பாதியிலேயே நின்றது.

ரூசோவிற்கு பிற்காலத்தில் நீதி மன்றத்தில் பத்திரங்களை நகல் எடுக்கும் வேலை வாங்கிக் கொடுத்தார் பெர்னாட். ஆனால், மேலாதிகாரிகளின் அடக்கு முறைக்குப் பணிய மறுத்த ரூசோவால் அப்பதவியில் அதிக நாள் நீடிக்க முடியவில்லை.ரூசோவின் சுய சிந்தனையும், தன்மான உணர்ச்சியும், பிறருக்காகப் பணிந்து பேசும் குணமும் அவரை பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. அவரது குணங்களால் பெரிதும் ஈர்க்கப் பட்ட " தெரேஸ் லீ வாஷீர்" என்னும் அழகு நங்கை,அவரைக் காதலிக்கத் தொடங்கினாள். ரூசோவும் அவளை உயிருக்கு, உயிராக காதலித்தார். ஆனால், இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

அவருக்கு ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் உதவி கிடைக்க ரூசோ நாடகம் மற்றும் கவிதைகளை எழுதினார். பாரிசில் அவர் எழுதிய பல நூல்கள் பிரசுரம் ஆனது. அவர் எழுதிய சமுதாய ஒப்பந்தம்,மலைக் கடிதங்கள், எமிலி போன்ற பல நூல்கள் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. இதன் மூலம் அவரது தத்துவம் சார்ந்த சிந்தனைகள் ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கியது. ரூசோ எதார்த்தமான மனிதராக இருந்தார். அவர் நகர வாழ்க்கையை விட, கிராம வாழ்க்கையை தான் அதிகம் விரும்பினார். பிரஞ்சு நாட்டில் புரட்சி வெடிக்க அவரது எழுத்துக்களும் ஒரு காரணம் தான் என்று சொல்லப்படுகிறது.

இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டையும் , அதற்காகத் தாம் எடுத்துக்கொண்டு முயற்சிகளையும், தமது இலக்கியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களால், தமக்கு ஏற்பட்ட இன்னல்களையும், எதிர்கால மக்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால எழுத்தாளர்கள் தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களையெல்லாம் எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவும் ரூஸோ ‘மகாக் கடிதங்கள்’ என்ற தலைப்பில் 1764-ல் ஒருநூலை வெளியிட்டார்.

தனது எழுத்துக்கள் மூலம் சமத்துவத்தை போதித்தார் ரூசோ. அதனால், சில இடங்களில் அவரது நூல்கள் எரிக்கப்பட்ட வரலாறும் உண்டு, இருந்தாலும் ரூசோ தனது எழுத்துப் பணியை தொடர்ந்தார். அவர் எழுதிய 'ஜூலி' என்ற காதல் கதை, மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றுத் தந்தது. ஜூலை மாதம் 2 ஆம் நாள் ,அது 1778 ஆம் வருடம், எப்போதும் போல காலை நேரத்தில் உலாவச் சென்ற ரூசோ வீடு திரும்பியதும் மயங்கி விழுந்தவர் தான். அடுத்த வினாடிகளில் அந்த சிறந்த எழுத்தாளனின் உயிர் காற்றோடு காற்றாக கலந்தது.

ரூசோவின் நூல்கள் பிரஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தாலும். அவர் மறைந்து பதினேழாவது ஆண்டில் தான் பிரஞ்சு நாட்டின் முடியரசு முடிவுக்கு வந்தது. பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்ட போது ரூசோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மதிப்பு மரியாதையுடன் ஆயிரக்கணக்கான மக்களின் ஊர்வலத்துடன் பிரபலமானவர்கள் புதைக்கப்படும் மயானத்தில் அவரது சடலம் புதைக்கப்பட்டது. அவரது புகழ் உலகம் உள்ள வரை நீடிக்கும்.