மிதிலைக் காட்சிப் படலம் - 606
606.
நிழல் இடு குண்டலம்
அதனின். நெய் இடா.
அழல் இடா. மிளிர்ந்திடும்
அயில் கொள் கண்ணினாள்.
சுழலிடு கூந்தலும்
துகிலும் சோர்தர.
தழல் இடு வல்லியே
போல. சாம்பினாள்.
நிழல் இடு - ஒளி வீசுகின்ற; குண்டலம் அதனின் -
காதணியான குண்டலம் வரை சென்று; நெய் இடா - நெய்
தடவப் பெறாமலும்; அழல் இடா - நெருப்பிலே வைத்துக்
காய்ச்சப் பெறாமலும்; மிளிர்ந்திடும் அயில்கொள் - விளங்கும்
வேல் போன்ற; கண்ணினாள் - விழிகளையுடைய சீதை; சுழலிடு
கூந்தலும் - கடை குழன்ற தன் கூந்தலும்; துகிலும் சோர்தர -
உடையும் நெகிழும்படி; தழல்இடு - நெருப்பிலே போட்ட;
வல்லியே போல - பூங்கொடி போல; சாம்பினாள் - வாடினான்.
நெய் இடா அழல் இடா மிளிர்ந்திடும் அயில்: இல்பொருள்.
உவமை. சுழல் இடு கூந்தல்: பனிச்சை. சீதை நினைப்பு மிகுதியால்
உடற்சோர்வுற்று மிக வருந்தினாள். 43
