மிதிலைக் காட்சிப் படலம் - 607

bookmark

607.

தழங்கிய கலைகளும். நிறையும். சங்கமும்.
மழுங்கிய உள்ளமும். அறிவும். மாமையும்.
இழந்தவள் - இமையவர் கடைய. யாவையும்
வழங்கிய கடல் என - வறியள் ஆயினாள்.
 
தழங்கிய     கலைகளும் - ஒலிக்கின்ற மேகலை அணிகளையும்;
நிறையும்  -  மனவுறுதியையும்; சங்கமும் - சங்கு வளையல்களையும்;
மழுங்கிய உள்ளமும் - வாட்டம் அடைந்த மனத்தையும்; அறிவும் -
அறிவையும்;  மாமையும் -  மேனியின்  நிறத்தையும்;  இழந்தவள் -
(அப்பொழுது  காதல்   நோயால்)  இழந்துநின்ற  சீதை;  இமையவர்
கடைய  -  தேவர்கள்  கடலைக்   கடைந்தபொழுது;    யாவையும்
வழங்கிய -  (தன்னிடமுள்ள  சிறந்த பொருள்கள்)  எல்லாவற்றையும் 
கொடுத்துவிட்ட; கடல்  என  -  கடல் போல; வறியள் ஆயினாள்
- எந்த ஒரு சிறந்த பொருளும் தன்னிடம் இல்லாதவள் ஆனாள்.

பெண்களுக்குச்  சிறந்த அணிகளாகிய மேகலை முதலியவற்றையும்.
குணங்களான  நிறை  முதலானவற்றையும்  சீதை இழந்ததால் ‘வறியள்
ஆயினாள்’ என்றார். மேகலைகள் எட்டுக் கோவைகள் உள்ளமைபற்றி
கலைகள்  என்றார். இமையவர்: கண் இமையாதவர்: இமையில்  சிறப்பு
உள்ளவர்.                                               44