மிதிலைக் காட்சிப் படலம் - 605
605.
நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;
காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே.
நோம் - (சீதை காமநோயால்) வருந்துவாள்; உறும்நோய் நிலை
நுவலகிற்றிலள் - (கணத்திற்குக் கணம் தன்னிடம்) மிகுகின்ற அக்
காமநோயின் நிலையை எவருடனும் சொல்ல முடியாதவளாய்; ஊமரின்
மனத்திடை - ஊமைகள் போல மனத்திற்குள்ளேயே; உன்னி
விம்முவாள் - நினைந்து தேம்புவாள் ; காமனும் - (அப்பொழுது)
மன்மதனும்; ஒரு சரம் - ஓர் அம்பினை; கருத்தில் - அவளது
மனத்திலே; வேம் எரி அதனிடை - எரிகிற நெருப்பிலே; விறகு
இட்டு என்ன - விறகைப் போட்டாற்போல; எய்தனன் - எய்தான்.
மன்மதன். பாணம்: மன்மதன் தன் ஐங்கணைகளுள் நினைப்பை
மிகுவிக்கக் கூடிய தாமரை மலரைச் சீதைமேல் எறிந்தான். 42
