மிதிலைக் காட்சிப் படலம் - 594

bookmark

594.

பொன் சேர் மென் கால் கிண்கிணி.
   ஆரம். புனை ஆரம்.
கொன் சேர் அல்குல் மேகலை.
   தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில்
   காண. சத கோடி
மின் சேவிக்க மின் அரசு
   என்னும்படி. நின்றாள்.
 
பொன்சேர்- பொன்னாலாகிய; மென்கால் கிண்கிணி - மெல்லிய
பாதங்களில்   அணிகிற   சலங்கைகளையும்;   ஆரம்  -  இரத்தின
மாலைகளையும்;  புனை  ஆரம்  -  சூடக்கூடிய  பூமாலைகளையும்;
கொன்சேர் அல்குல் மேகலை - பெருமை மிக்க இடையில் அணியும்
மேகலை  என்னும்  அணிகலனையும்;  தாங்கும்  - அணியும்; கொடி
அன்னார் - பூங்கொடி போன்ற தோழியர் பலர்; தன்சேர் கோலத்து
- தன்னிடம் பொருந்திய வடிவத்தின்;  இன்னெழில் காண -  இனிய
அழகை  ஆசையோடு  பார்த்து  நிற்க; சதகோடிமின் - (அவர்களின்
இடையிலே) நூறுகோடி  மின்னல்கள்;  சேவிக்க - (சுற்றிலும் இருந்து
வணங்கிப்  பணி  செய்ய; மின்  அரசு  என்னும்படி - (அவற்றுக்கு
இடையே  நின்ற  ஒரு)  மின்னல்களுக்கு  அரசு  என்று  கருதுமாறு ;
நின்றாள் - (சீதை) நின்று கொண்டிருந்தாள்.   

பெண்களும்   விரும்பும் சீதையின் அழகு என்பது ‘கொடியன்னார்
தன்சேர்   கோலத்து   இன்னெழில்   காண’   என்னும்   அடியால்
பெறப்படுகிறது. மின் சேவிக்க.....நின்றாள்: தற்குறிப்பேற்றவணி.     31