மிதிலைக் காட்சிப் படலம் - 593

bookmark

593.

தன் நேர் இல்லா மங்கையர்.
   ‘செங்கைத் தளிர் மானே!
அன்னே! தேனே! ஆர் அமிழ்தே!’
   என்று அடி போற்றி..
முன்னே. முன்னே. மொய்ம் மலர்
   தூவி. முறை சார.
பொன்னே சூழும் பூவின்
   ஒதுங்கிப் பொலிகின்றாள்.
 
தன்    நேர் இல்லா- தன் தனக்கு  உவமையாகும்  பொருளைப்
பெறாத; மங்கையர்  -  தோழியர்  பலர்;  செங்கைத்தளிர்  மானே
- சிவந்த  தளிர் போலும்  கைகளை  உடைய  மான்  போன்றவளே!;
அன்னே -  தாயே!;  தேனே  -  தேன்போல்  இனியவளே!;  ஆர்
அமிழ்தே  -  (பெறுதற்கு)  அரிய  அமிர்தம் போன்றவளே;  என்று
- எனச் சொல்லி  அழைத்து; அடிபோற்றி - (அவளுடைய) அடிகளை
வணங்கி;  முன்னே    முன்னே    -    (நடந்து   செல்லக்கூடிய)
முன்னிடங்களில்; மொய்ம்மலர் தூவி - அடர்ந்த பூக்களைக் கொண்டு
வந்து தூவி; முறை சார - முறையே  நிரம்பி  நிற்க;(அந்த மலர்களின்
மேல்);  பொன்னே  சூழும்  -  மகரந்தப்பொடி  நிரம்பிய;  பூவின
- (தூவப் பெற்ற)  அந்தப்   பூவிலே;  ஒதுங்கிப்   பொலிகின்றாள்
- நடந்து  (சீதை) விளங்குகின்றாள்.  

சீதையின்    மென்மை: தோழியர் சீதையின் அடிகளைப் போற்றி
மலர்  தூவி  நிற்க.  அம்மலர்களின்  மேல் அச்சீதை தன் அடிகளை
வைத்து  நடக்கின்றாள்  என்பதால்  அவளது  மென்மை புலனாகும்.
‘அனிச்சமும்  அன்னத்தின்  தூவியும்  மாதர்.  அடிக்கு  நெருஞ்சிப்
பழம்’  -  குறள்  1120  ஒப்பு  நோக்கத்தக்கது. முன்னே பின்னே -
அடுக்கு. தொறுப் பொருளுடையது (ஊர்தொறும்).              30