மார்க் ட்வெயின்
மார்க் ட்வெயின் அமெரிக்காவில் 1835 ஆம் வருடம் பிறந்தார். இவரது இயற்பெயர் "சாமுவேல் லாவ்கார்ன் கிளமன்ஸ்" என்பதாகும்.இவர் சிறந்த கதைகளையும், கட்டுரைகளையும் எழுதிப் புகழ் பெற்றவர். இவரது படைப்புகள் பல நகைச்சுவை மிகுந்து இருக்கும். இவர் முதலில் அச்சுக் கோர்க்கும் தொழிலை செய்து வந்தார். பிறகு சுரங்கத்தில் பணி புரிந்தார்,கப்பல்களுக்கு வழி காட்டியாகவும் வேலை பார்த்து உள்ளார். பின்னாளில் தான் இவர் எழுத்தாளராக பரிணாமம் அடைந்து உள்ளார். இவர் எழுதுவதில் மட்டும் அல்ல, பேச்சிலும் வல்லவர். பல நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகளை செய்து பெயரையும், புகழையும் சம்பாதித்தவர்.
மார்க் ட்வெயின் இளைஞராக இருந்த போது, தினமும் வேலை தேடி அலைந்து கொண்டு இருந்தார். அச்சமயத்தில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இவர் ஆறு மாதங்கள் தனது வேலையே சிறப்பான முறையில் செய்தார்.ஒரு நாள் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் மார்க் ட்வெயின் அவர்களை அழைத்து வேலையில் இருந்து அவரை நீக்கிய செய்தியை அவரிடம் கூறினார். இதனைக் கேட்ட மார்க் ட்வெயின் தன்னை வேலையை விட்டு நீக்கியதற்கான காரணத்தை அப்பத்திரிக்கை ஆசிரியரிடம் கேட்டார். அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் " நீ சரியான சோம்பேறி. அதனால் தான் உன்னை வேலையை விட்டுத் தூக்கி உள்ளோம் என்று பதில் அளித்தார்.
மார்க் ட்வெயின் முதலில் கோபப்பட்டாலும் பின்னர் சிரித்துக் கொண்டே அந்த ஆசிரியரைப் பார்த்து " நான் சோம்பேறி என்று நீங்கள் கண்டு பிடிக்க உங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், எனக்கோ உங்களைப் பற்றி அன்றே தெரியும்" என்று சொல்லி விட்டு விறு, விறு என்று நடந்து விட்டார்.( அதாவது அவர் சொன்ன அந்த வார்த்தையின் அர்த்தம் இது தான் " நான் சோம்பேறி என்று கண்டு பிடிக்க உனக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டால். நீ எவ்வளவு பெரிய சோம்பேறியாக இருப்பாய்" என்பது தான் அவரது வாக்கியத்தில் இருந்த உள் குத்து). அந்த பத்திரிகை ஆசிரியருக்கு மார்க் ட்வெயின் வார்த்தை புரியாமல் இல்லை, ஆனால் புரிந்தும் அவரால் என்ன செய்ய முடியும்?
இன்னொரு முறை, இன்னொரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்தது. மார்க் ட்வெயின் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பரை பார்க்கச் சென்றார். அப்போது நண்பர் வீட்டில் இருந்த புத்தகங்களைப் பார்த்து படிக்கக் கேட்டாராம் மார்க் ட்வெயின். ஆனால் அந்த நண்பரோ "ஐய்யா, தாங்கள் எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டிற்கு வந்து இந்த புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், ஆனால் என் வீட்டில் இருக்கும் புத்தகங்களை வெளியில் யாருக்கும் கொடுக்க மாட்டேன்" என்று கூறி மறுத்து விட்டார்.
சில நாட்களுக்குப் பின்னர், அதே பக்கத்து வீட்டு நண்பர் மார்க் ட்வெயின் அவர்களிடம் வந்து அவரது வீட்டில் இருக்கும் புல் அறுக்கும் இயந்திரத்தை சில மணித் துளிகள் தனக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு மார்க் ட்வெயின், "ஐயா, நான் புல் அறுக்கும் இயந்திரத்ததை வெளியில் எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி அளித்ததில்லை. மேலும், அதனை எனது வீட்டிற்குள் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்பாடு வைத்துள்ளேன்" என்றாராம். இதனைக் கேட்ட நண்பர் முகத்தில் ஈ ஆடவில்லை. இவ்வாறு எழுத்திலும், பேச்சிலும் நகைச்சுவை முத்திரையை பதித்த மார்க் ட்வெயின், 1910 ஆம் ஆண்டு இந்த உலகத்தை விட்டு மறைந்தார். ஆனால், அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் இன்றும் புகழ் பெற்றுக் கொண்டு தான் உலகத்தை உலா வருகின்றன.
