பூக் கொய் படலம் - 1012
மனைவியின் கோபம் கண்டு ஒருவன் தடுமாறுதல்
1012.
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி. - ஓர்
தண்டுபோல் புயத்தான் தடுமாறினான்.
‘உண்டு கோபம்’ என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே.
ஓர் தண்டு போல் புயத்தான் - தண்டாயுதம் போன்ற
தோள்களையுடையான் ஒருவன்;வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி
- வண்டுகள் தங்குகின்ற கூந்தலையுடைய (தன்) மனையாட்டியின்
முகத்தைப் பார்த்து; அவள் தொண்டைவாயில் - அவளுடைய
தொண்டைக் கனி போன்ற வாயில்; துடிப்பு ஒன்று சொல்ல - துடித்த
துடிப்பு (குறிப்பால்) ஒன்றை உணர்த்த; கோபம் உண்டு என்று -
(இவள் மனத்தில்) சினம் உண்டு என்று; உள்ளத்து உணர்ந்து
தடுமாறினான் - உள்ளத்தால் உணர்ந்து (அதனை நீக்கும் நெறி
தெரியாமல்) தடுமாற்றம் கொண்டான்.
வழக்கமாய் மாலையணிந்து பொலியும் தோள்களையுடையவன்.
வெறுந்தோளனாய் வருதலால். மாலையை யார்க்கு ஈந்தானோ என்று
ஐயுற்று இதழ் துடிக்கச் சினங் காடடினாள் என்பது குறிப்பால் தோன்ற
“அவள் தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்ல” என்றார். வீர
மார்பினர் ஆயினும் மெல்லிய பெண்மையின் சினத்தால் வீரமிழந்து
தவித்தான் என்பார். “தண்டுபோல் புயத்தாள் தடுமாறினான்”
என்றார். 38
