பல்லவர் காலச் சைவ சமயம்

bookmark

பல்லவர் காலம்: சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழ.கி.பி. 400எனச் சென்ற பகுதியிற் கூறப் பட்டதன்றோ? அந்தக் காலமுதல் பல்லவப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலம் (ஏறத்தாழ கி.பி.900) வரை "பல்லவர் காலம்" என்னலாம்.
----------
[1] பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது கி.பி.400-க்கு முன்பே எனினும், சைவத்தொண்டு செய்த முதல் பல்லவன் கந்த சிஷ்யனே (கி.பி. 400-436) ஆதலின், சைவ சமய வளர்ச்சிக்காக, இவன் காலமே பல்லவர் கால முதலாகக் கொள்ளப்பட்டது.

இக்கால அரசியல் நிலை: இப்பல்லவரது பரந்து பட்ட காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி கி.பி. 400 முதல் 600. இரண்டாம் பகுதி 600 முதல் 900 வரை என்னலாம். முதற் பகுதியில் தமிழகம் களப்பிரர், பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டு அல்லற்பட்டது. காஞ்சி நகரம் பல்லவர் கைப்பட்டது. சோழ நாடும் பாண்டிய நாடும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. இந்நாடுகளை வென்ற முதல் களப்பிரன் அச்சுத விக்கந்தன் என்பவன். அவன் காலம் கி.பி. 550 என்று கூறப்படுகிறது.[2] பாண்டியநாடு ஏறத்தாழ, கி.பி.500இல் களிப்பிரர் ஆட்சியிலிருந்து விடுபட்டுப் பாண்டியர் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆயின், சோழ நாடு களப்பிரர் கையிலிருந்து பல்லவர் கைக்கு மாறிவிட்டது. அஃது ஏறத்தாழ, கி.பி. 600 முதல் 900 வரை பல்லவர் வசமே இருந்தது.
------
[2] History of Pali Literature, Vol. п, pp. 384, 385 389.

சோழர் கும்ப கோணத்தை அடுத்த பழையாறை, திருவாரூர் முதலிய நகரங்களைத் தன்னகத்தே பெற்ற மிகச் சிறிய நிலப்பகுதியைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் வடக்கே பல்லவப் பேரரசுக்கும் தெற்கே பாண்டியப் பேரரசுக்கும் இடையில் இருந்து வாழ வேண்டியவர் ஆயினர். ஆயினும், பல்லவர் தம் நாட்டைக் கவர்ந்தனர் ஆதலாலும் தமிழகத்துக்கே புதியவர் ஆதலாலும் சோழர், அவர்கள் வலியை ஒடுக்கப் பாண்டியருடன் உறவுகொண்டு வாழ்ந்து வந்தனர். எனினும், பல்லவர் பகைமையை விரும்பாமல், அவர்கள் அரசியலில் உயர்ந்த அலுவலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தனர் போர்க் காலங்களில், சமயத்துக்கு ஏற்றபடி ஒருகால் பல்லவருடனும் பிறிதொருகால் பாண்டியருடனும் சேர்ந்து போரிட்டனர். கி.பி. 600-க்கு முன்வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து ஆட்சி செய்யக்கூடவில்லை ஆயினும், கி.பி. 600 முதல் 900 வரை அவர்கள் பேரரசு தமிழகத்தில் வன்மையுற்று விளங்கியது. பல்லவர் அரசு தொடர்ச்சியாக இருந்து வந்தது. அங்ஙனமே கி.பி. 600 முதல் பாண்டிய அரசும் தொடர்பாக விளக்க முற்றிருந்தது.

நாயன்மார் காலம்: சங்க (கி.பி.400-க்கு முற்பட்ட) நூல்களில் நாயன்மார் ஒருவரேனும் குறிக்கப்பட்டிலர்: நாயன்மார் பெயர்களைக் குறிப்பிட்டுத் தொகை பாடிய சுந்தரர் காலம் ஏறத்தாழ கி.பி. 840-865 என்னலாம். அப்பர் - சம்பந்தர் காலம் ஏறத்தாழ கி.பி.580-661,இவ்விருவரும் தமக்கு முற்பட்டவராக நாயன்மார் பலரைத் தம் பதிகங்களிற் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவராற் குறிக்கப்படாமல் சுந்தரரால் மட்டும் அவரது திருமுறையில் சிறப்பாகக் குறிக்கப்பட்ட அடியார் பலர். எனவே, (1) அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்டவர் (கி.பி. 400-600) (2) அப்பர் - சம்பந்தர் காலத்தவர் (கி.பி.600-661), (3) அப்பர் - சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட (கி.பி. 661-840) காலத்தவர், (4) சுந்தரர் காலத்தவர் (கி.பி.840-865) என நாயன்மார் நான்கு கால எல்லைக்கு உட்பட்டவர் ஆவர். எங்ஙனம் பார்ப்பினும், நாயன்மார் அறுபத்து மூவரும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் தோன்றிச் சைவத்தை வளர்த்து மறைந்த பெருமக்களே ஆவர் என்னலாம்.

அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட காலம் (கி.பி. 400 - 600)
அப்பர், சம்பந்தர் பாக்களைக்கொண்டு அவர்க்கு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் பதின்மர் ஆவர். வரலாற்றுக் கண்கொண்டு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் எழுவர் ஆவர். எனவே, இக்காலத்தில்17 நாயன்மார் வாழ்ந்தனர் எனக் கூறலாம். அவர் (1) கண்ணப்பர், (2) கணம்புல்லர், (3) அரிவாள் தாயர், (4) நமிநந்தி அடிகள், (5) தண்டியடிகள், (6) கோச்செங்கணான், (7) கூற்றுவ நாயனார், (8) புகழ்ச்சோழர், (9) எறிபத்தர்.(10) புகழ்த்துணை நாயனார். (11) காரைக்கால் அம்மையார் (12) மூர்த்தி நாயனார், (13) ஐயடிகள் காடவர்கோன், (14) சண்டேச்வரர் (15) திருமூலர், (16) சாக்கிய நாயனார். (17) அமர்நீதி நாயனார் என்பவராவர்.

இவருள், காரைக்கால் அம்மையாரும் காடவர்கோனும் பாடியுள்ள பாக்களை ஆராய்ந்தால், அக்காலத் தமிழகத்திற் பல ஊர்களில் சிவன் கோயில்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை உறையூர், சேய்ஞலூர், கருவூர், காஞ்சி, தண்டலை, ஆப்பாடி, ஆலங்காடு, ஆவடுதுறை, காளத்தி, ஆலவாய் (மதுரை), தில்லை, ஆரூர், பழையாறை என்னும் ஊர்களில் உள்ளவை ஆகும். அவை அல்லாமல் கோச் செங்கட்சோழன் சாய்க்காடு, நன்னிலம் முதலிய எழுபது இடங்களில் புதியனவாக எடுப்பித்த கோவில்களும் குறிக்கத்தக்கவை. இவையாவும் கோச்செங்கணான் போன்ற பெரிய அரசர்களால் போற்றிப் பாராட்டப்பட்டமையின், சிறந்த நிலையில் இருந்தன என்னலாம்.

"ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் பாடிய "க்ஷேத்திர வெண்பா" என்பது அழிந்த நிலையில் கிடைத்துள்ளது. அதில் 23 சிவத் தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. நூல் முழுவதும் கிடைத்திருக்குமாயின். மேலும் பல தலங்களின் பெயர்களை அறியக்கூடும். ஐயடிகள் [3] சிவத்தலயாத்திரை செய்தவர். சிவன்கோவில் கட்குப் பல திருப்பணிகள் செய்தவர். ஆதலால், அவர் காலத்தில் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டில்) சிவத்தலங்கள் சிறப்புற்று இருந்தன. என்பதை நன்கு அறியலாம்.
-------
[3] ஐயடிகள் - பஞ்சபாத சிம்ஹன் அஃதாவது, மூன்றாம் சிம்மவர்மன்(சிம்ம விஷ்ணுவின் தந்தை) என்பர் ஆராய்ச்சியாளர்.

அப்பர்-சம்பந்தர் காலம் (கி.பி 600-661)
மகேந்திர வர்மன்: இவன் அப்பர் காலத்தவன் சமண சமயத்திலிருந்து சைவராக மாறின அப்பரைச் சமண முனிவர் யோசனைப்படி நீற்றறையில் இட்டவன். விடங்கலந்த உணவை உண்ணச் செய்தவன். யானையைக் கொண்டு அப்பரைக் கொல்ல முயன்றவன். இறுதியில் அவரைக் கல்லிற்கட்டிக் கடலிற் பாய்ச்சினவன். இத்துன்பங்களிலிருந்து அப்பர் தப்பியதும் தானும் சமணப்பற்றை விட்டுச் சைவத்தைத் தழுவினவன். இவன் இங்ஙனம் சைவனாக மாறியவுடன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைவித்து சிவலிங்கத்தை எழுதருளச் செய்தான். வேற்றுத்துறையில் இருந்த எனது அறிவை நன்னிலைக்குத் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகெலாம் பரவட்டும் என்ற தன் கருத்தைக் கல்வெட்டுமூலம் வெளிப்படுத்தியுள்ளான். இவனுடைய விருதுப் பெயர்கள் பலவற்றுள் குணபரன் என்பது ஒன்று. இவன் பாடலிபுரத்திலிருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு "குணபர ஈச்சரம்" என்ற சிவன் கோவிலைத் திருவதிகையிற் கட்டினான். இவன் சிவபெருமானுக்காகச் சீயமங்கலம், பல்லாவரம்,வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் கோவில்களைக் குடைந்தமைத்தான். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவனே தமிழகத்தில் முதன் முதல் கற்கோவில் கண்ட காவலன் ஆவன். இவன் காலத்தில் இருந்த தமிழகத்துக் கோவில்கள் அனைத்தும் செங்கல்,மண் மரம், உலோகம் சுண்ணாம்பு முதலியன கொண்டு கட்டப்பட்டவை. அதனாற்றான் அப்பழங்காலத்துக் கோவில்கள் நாளடைவில் அழிந்துபட்டன. மகேந்திர வர்மன் இசையிலும் நடனத்திலும் நாடகத்திலும் சிறந்த புலவனாக இருந்தான். இவன் காலத்தில் தமிழ்நாட்டுச் சைவ சமயம் சிறந்த நிலையில் இருந்தது என்பது அப்பர், சம்பந்தர் பாடல்களால் அறியலாம்.

அப்பர் - சம்பந்தர் திருமுறைகள் அறிவிப்பன: மகேந்திரவர்மன் காலத்தும் அவன் மகனான நரசிம்மவர்மன். காலத்தும் வாழ்ந்த அப்பர்,சம்பந்தர் பாடிய திருமுறைகள் ஆராயத்தக்கன. அவற்றுள் அப்பர் பாடிய தலங்கள் 126 சம்பந்தர் பாடியன ஏறத்தாழ 220. வைப்புத் தலங்கள் உட்படப் பாடல் பெற்ற தலங்கள் 300 என்னலாம். இக்கோவில்கள் எல்லாம் அழிந்துவிடத் தக்க மண், மரம், செங்கல், உலோகம், சுண்ணாம்பு இவற்றால் கட்டப்பட்டவையே ஆகும். இவை இமயம் முதல் கன்னியாகுமரி முனைவரை பரந்திருந்தன. இக் கோவில்கள் பலவற்றில் இசை, நடனம் வளர்க்கப்பட்டன. பல கோவில்கள் பெரியன. கோபுரங்கொண்டன. பலவற்றில் விழாக்கள் சிறப்புற நடந்தன. பல தலங்களில் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் வரலாறுகள் வழக்கில் இருந்தன. பலலவ அரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்களும் பாடப்பெற்றன. அவை பல்லவன் ஈச்வரம், மகேந்திரப்பள்ளி என்பன. பலவகையான சைவ அடியார்கள் தலங்கள் தோறும் இருந்தனர். யாத்திரை செய்தனர். தில்லை, திருவாரூர், காளத்தி, ஆலவாய் முதலியன சிறந்த சிவத்தலங்களாக விளங்கின. பழைய நாயன்மார்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் உள்ள கோவில்களில் அவர்களுடைய நினைவுக்கு அறிகுறியாகக் கற்சிலைகள் எழுப்பபட்டிருந்தன போலும்! அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெற்று வந்திருக்கலாம். என்னை? அவ்வத்தலத்துப் பதிகத்தில் அப்பரும் சம்பந்தரும் அவ்வந் நாயன்மார் பக்தியைப் பாராட்டிப் பாடியிருத்தலால் என்க.

அப்பரது திருத்தொண்டின் உறைப்பால் பல்லவநாடு சைவ சமயத்திற்கு ஆட்பட்டாற்போலச் சம்பந்தர் திருத்தொண்டால் பாண்டிய நாடு சமணத்திலிருந்து சைவசமயத்தை ஏற்றுக் கொண்டது. சம்பந்தர் பாண்டிய நாட்டில் இருந்த சமணமுனிவரை அனல்வாதம், புனல்வாதம் முதலியவற்றில் வென்றார். பாண்டியனது வெப்பு நோயை அகற்றினார். சம்பந்தர்க்கு உதவியாகப் பாண்டியன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் - அமைச்சராகிய குலச்சிரை நாயனாரும் இருந்து தொண்டு செய்தனர். சமணனாக இருந்த பாண்டியன் நெடுமாறன் சைவன் ஆனான். சம்பந்தருடன் பாண்டி நாட்டுச் சிவத்தல யாத்திரை செய்தான். சமணரது ஆதிக்கத்தைத் தன் நாட்டிலிருந்து ஒழித்தான். சம்பந்தரது இச்செயற்கரிய திருத்தொண்டால் பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் சிறப்புற்றன. மக்கள் பழையபடி சைவத்தைத் தழுவி வளர்க்கலாயினர்.

அப்பர்: சம்பந்தர் பாடிய பதிகங்கள் அவ்வத்தலத்து அடியாரால் எழுதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டிருக்கலாம். அவை அவ்வக் கோவில்களிலும் ஒதப்பெற்றனவாகலாம். அப்பர். சம்பந்தருடன் தல யாத்திரை சென்ற அடியார்கள். தலந்தோறும் அவர்கள் பாடிய பதிகங்களை எழுதி வந்தனர் என்னலாம். அப்பர். சம்பந்தருடன் அடியார் பலர் கூடித் தலயாத்திரை செய்து நாடெங்கும்.பக்தியைப் பரப்பி வந்தனர்.

பல்லவர் ஆட்சியில் கோவில்கள் சிறப்புற்று விளங்கினமையின்,அப்பர்க்கும் சம்பந்தர்க்கும் கோவில்களில் வரவேற்பும் பிறசிறப்புகளும் நடைபெற்றன. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் சமய போதனை, அடியார்க்கு உணவு வசதி, தங்கல் வசதி முதலியன சிறப்பாக அளிக்கப்பட்டன. கோவில்களை அடுத்து மடங்கள் இருத்தல், சமணப் பள்ளிகளை அடுத்துப் "பாழிகள்" இருந்தமை போலாகும். நாயன்மார் ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தர். உணவுச்சாலை முதலியன வைத்துப் பொது மக்கட்குத் தொண்டு செய்து அவர்களைச் சைவத்தில் பற்றுள்ளம் கொள்ளச் செய்தனர். அக்காலச் சைவ அடியார்களுக்குள் மேல் வகுப்பு - கீழ் வகுப்பு, முதலாளி - தொழிலாளி, அரசன் – ஆண்டி, கற்றவன் - கல்லாதவன் என்ற வேறுபாடுகள் காட்டப்பட்டில. பக்தி ஒன்றையே சமய அடிப்படையாகக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட உள்ளத்தவராய்ச் சைவப் பயிர் தழைக்க உழைத்தனர். இளஞ் சிறுவராகிய சம்பந்தர் என்ற மறையவர். முதுமையும் பக்தியின் மேன்மையும் கொண்ட வேளாளராகிய,திருநாவுக்கரசரை, அப்பரே! (தந்தையே) என அழைத்தமையும்,அப்பூதி அடிகள் என்ற மறையவர் திருநாவுக்கரசரைப் பணிந்து பாத பூசை செய்து உடனிருந்து உண்டமையும், திருநீல நக்கர் என்ற மறையவர் தமது இல்லத்தில் வேள்விக் குழியண்டைப் பாணர் வகுப்பினரான திருநீலகண்டரையும் அவர் மனைவியாரையும் தங்கியிருக்க விட்டமையும் மேற்கூறியதற்குத் தக்க சான்றுகள் ஆகும். இங்ஙனம் அப்பர்-சம்பந்தர் காலத்தில் பல்லவ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் சைவ சமயம் வளர்க்கப்பட்டதற்கு அடியார்களின் ஒத்தகருத்தும் அரசர் காட்டிய ஆதரவுமே சிறப்புடைக் காரணங்கள் ஆகும்.

இக்கால நாயன்மார். (1) திருநாவுக்கரசர், (2) திருஞான சம்பந்தர், (3) சிறுத்தொண்டர், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (5) முருக நாயனார், (6) குங்கிலியக்கலயர், (7) நீலநக்கர், (8) நெடுமாறர், (9) மங்கையர்க் கரசியார், (10) குலச்சிறையார், (11) அப்பூதி அடிகள் என்ற பதினொரு வரும் இக்காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

அப்பர் - சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலம் (கி.பி. 661 - 840)
பரமேச்வர வர்மன் (கி.பி. 670-685):
இக்காலப் பல்லவ அரசருள் முதல்வன் பரமேச்வர வர்மன். இவன் சிறந்த சிவபக்தன் உருத்திராக்கம் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப்பட்ட முடியை அணிந்த பெரும் பக்தன். கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கற்கோவில் கட்டிய முதற் பல்லவன் இவன். இவன் இங்ஙனம் சிவன் கோயில் ஒன்றைக் கூரத்திற் கட்டிப் பட்டயம் விடுத்தவன். மகாபலிபுரத்து ஒற்றைக் கல் கோவில்களில் உள்ள மேல் அடுக்கு இவன் காலத்திற் குடையப்பட்டது. இவன் சிறந்த வடமொழிப் புலவன்.

இராச சிம்மன் (கி.பி.685-720): இவன் பரமேச்வரன் மகன்; தந்தையைவிடச் சிறந்த சிவபக்தன்; உலகப் புகழ்பெற்ற காஞ்சி-கயிலாசநாதர் கோவிலைக் கட்டிப் புகழ்பெற்றவன்; திருநின்றவூரில் மனக்கோவில் கட்டிய பூசலார் காலத்தவன். "சிவ சூடாமணி,சங்கரபக்தன். ரிஷபலாஞ்சனன்" என்ற தொடர்களால் இவனது சைவப்பற்றை விளக்கமாக அறியலாம். இவன் "ஆகமப் பிரியன்" என்று கல்வெட்டுகளிற் கூறப்படலால், சைவ ஆகமங்களில் பற்றுடையவன் என்பது அறியப்படும். இப்பல்லவ வேந்தன் சிறந்த இசைப்புலவன். இசைக் கருவிகளை மீட்டுவதில் இணையற்றவன். நடனக்கலையில் சீரிய புலமை உடையவன். இக்கலியுகத்தில் வான் ஒலி (அசரீரி) கேட்டவன். இவன் காஞ்சியில் ஐராவதேசர் கோவில், மதங்கிசர் கோவில், கயிலாசநாதர் கோவில் என்பனவும், மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாகவுள்ள கோவில், பன்மலைக் கோவில் என்பவற்றையும் கட்டியவன். இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிலில் இவன் காலத்துச் சிறந்த நடன வகைகள் சிற்பவடிவிற் காட்டப்பட்டுள்ளன. சிவபிரான் ஆடிய உயர்தர நடன வகைகள் வியக்கத் தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன. சிவபெருமானுடைய திருக்கூத்தின் சிறப்பைத் திருநாவுக்கரசர் தேவாரத்திற் படித்து இன்புறலாம். ஆனால், அவ்விவரங்களைக் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களில் கண்களாரக் கண்டு களிக்கலாம்.

பல்லவ மல்லன் (கி.பி. 725-790): இவன் சிறந்த வைணவன். திருமங்கை ஆழ்வார் காலத்தவன். இவன் வைணவன் ஆயினும், இவன் காலத்திற் சிவன் கோவில்கள் சிறப்புற்று விளங்கின. காஞ்சியில் உள்ள முத்தீசர் கோவில் திருக்குறிப்புத்தொண்டர் பூசித்தாகும். அஃது இவன் காலத்தில் "தர்ம மகா தேவீச்வரம்" என்ற பெயருடன் விளங்கியது. அதனில் 44 தேவரடியார் இருந்து இசை, நடனக் கலைகளை வளர்த்தனர். சிற்றரசர் பலரும் குடிமக்கள் பலரும் நாடெங்கும் இருந்த கோவில்கட்குப் பல தானங்கள் செய்துள்ளனர். இப்பல்லவ வேந்தன் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பிரமதேயமாகப் பல ஊர்களை விட்டவன். சுருங்கக்கூறின், இவன் காலத்தில் சைவமும் வைணவமும் ஒருங்கே வளர்க்கப்பட்டன என்னல் தவறாகாது.

நந்திவர்மன் (790-840): இவன் பல்லவ மல்லன் மகன். பரம பாகவதன். எனினும், இவன் காலத்தில் சிவன்கோவிற் பணிகள் நடந்தவண்ணம் இருந்தன. இவன் காலத்துப் பணிகளுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கது கச்சித் திருமேற்றளிக் கோவிலுக்கும் அதனைச் சார்ந்த மடத்திற்கும் முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்ததாகும். இதனால், தமிழ் நாட்டில் தேவார காலத்திற்றானே கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன என்பது உண்மையாதல் காணலாம்.

இக்கால நாயன்மார்: அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் 17பேர். அப்பர்-சம்பந்தர் காலத்தவர் 11 பேர். சுந்தரர் காலத்தவர் 13 பேர். எனவே, அப்பர்-சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் 22 பேர் ஆவர். அவராவார் - (1) பூசலார் நாயனார், (2) காரி நாயனார், (3) அதிபத்த நாயனார், (4) கலிக்கம்ப நாயனார், (5) கலிய நாயனார், (6) சத்தி நாயனார், (7) வாயிலார் நாயனார், (8) முனையடுவார் நாயனார் (9) இடங்கழி நாயனார், (10) இயற்பகை நாயனார், (11) நேச நாயனார், (12) இளையான்குடி மாற நாயனார், (13) மெய்ப்பொருள் நாயனார், (14) திருநாளைப்போவார் நாயனார், (15) ஏனாதிநாத நாயனார், (16) ஆனாய நாயனார், (17) உருத்திரபசுபதி நாயனார், (18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார், (19) மூர்க்க நாயனார், (20) சிறப்புலி நாயனார், (21) கணநாத நாயனார், (22) திருநீலகண்ட நாயனார் என்பவர்.

சுந்தரர் காலம்
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840-865). இவன்,
"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின் பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன்"
என்று சுந்தரரால் ஏத்தெடுக்கப்பெற்ற பெருமையுடைய சிவபக்தன் என்று அறிஞர் கருதுகின்றனர் [4]. இவன் "சிவனை முழுதும் மறவாத சிந்தையன்". இவன் திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர்,திரு நெய்த்தானம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் திருத்தொண்டு செய்தவன். இவன் விருதுப் பெயர்களுட் "குமார மார்த்தாண்டன்" என்பது ஒன்று. இவன், அப்பெயரால் விளக்கொன்று செய்து திருவிடைமருதூர்க் கோவிலுக்கு அளித்தான். இவன் காலத்தில், திரு ஆதிரைநாள் பல இடங்களிற் கொண்டாடப்பட்டது. இவன் மனைவியான மாறன் பாவையார் என்பவள் சிறந்த சிவபக்தி உடையவள். அவள் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவள். இப்பல்லவ வேந்தன் காலத்துக் கல்வெட்டில்தான் திருக்கோவில்களில் திருப்பதிகம் ஒதப்பெற்ற செய்தி அறியக் கிடக்கிறது.
------
4இவன் கழர்சிங்கன் என்பதற்குரிய சான்றுகளை எனது "பெரிய புராண ஆராய்ச்சி" என்னும் விரிவான நூலிற் கண்டு கொள்க. Vide also Dr.C. Minakkshi"s "Administration Social life under the Pallavas", pp.299-304

சுந்தரர் இவனிடத்திற் கரைகடந்த அன்பு கொண்டவர் என்பதற்கு, இவனை ஒரு நாயனாராகக் கொண்டு மேற்காட்டிய அடிகளிற் பாராட்டினமையே சிறந்த சான்றாகும்.

சுந்தரர் தேவாரம்: சுந்தரர் திருப்பதிகங்களால் அறியத் தக்க செய்திகள்:
1. பாடல்பெற்ற பல கோவில்களில் இசை வளர்க்கப்பட்டது.
2. பல கோவில்களில் நடனக்கலை கவனிக்கப்பட்டது.
3. கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன.
4. சைவ சமய நூல்கள் பல இருந்தன. வேறு பல கலைகளைப்பற்றிய நூல்களும் இருந்தன.
5. கோவில்களில், பண்டாரம் (பொக்கிஷ சாலை) இருந்தது.
6. பல தலங்களில் சுந்தரர் தமக்கு முற்பட்ட நாயன்மார்களைப் பாடியுள்ளனர். அதனால் அவ்வத்தலத்துக் கோவிலில் அவ்வந் நாயன்மார் உருவச் சிலைகள் இருந்திருத்தல் கூடியதே.
7. கோவில்களில் பாடியும் ஆடியும் பக்திசெலுத்திய அடியார் பலர் தலந்தோறும் இருந்தனர்.

இக்கால நாயன்மார்: (1) சுந்தரர், (2) சடையனார், (3) இசைஞானியார், (4) நரசிங்க முனையரையர், (5) ஏயர்கோன் கலிக்காம நாயனார், (6) மானக்கஞ்சாறர், (7) பெருமிழலைக் குறும்பர், (8) கோட்புலி நாயனார், (9) கழற்சிங்கர், (10) செருத்துணை நாயனார், (11) சேரமான் பெருமாள், (12) விறல்மிண்டர், (13) சோமாசிமாற நாயனார் என்போர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

திருமுறை ஓதல்: சுந்தரர் காலத்திலேயே வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லம் சிவன் கோவிலில் திருப்பதிகம் ஒதப்பட்டது என்பது கல்வெட்டால் தெரிகிறது. சுந்தரர் காலத்தவரான மானக்கஞ்சாற நாயனார் திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) சிவன் கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தார் என்று அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது. திருமுறைகள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதற்கு முன்பே எறும்பியூர், பழவூர், ஆவடுதுறை,தவத்துறை (லால்குடி) முதலிய இடத்துச் கோவில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது. இவற்றை நோக்க, நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்திலேயே பல கோவில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பெற்று வந்தன என்பதை எளிதில் உணரலாம்.

நாயன்மார் உருவச்சிலைகள்: அப்பர்-சம்பந்தர் காலத்திலேயே,அவர்க்கு முற்பட்ட நாயன்மார் உருவச் சிலைகள் அவர்கள் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் எடுப்பித்துப் பூசை முதலியன வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்று முன் சொல்லப்பட்ட தன்றோ? அதனை உறுதிப்படுத்துவனபோலச் சுந்தரர் காலத்தில் திருநாகேச்வரத்தில மிலாடுடையார்க்குக் (மெய்ப்பொருள் நாயனார்) கோவில் இருந்தமையும், காஞ்சியில் திருக்குறிப்புத் தொண்டர் பூசித்த முத்தீசர் கோவில் உண்மையும் கல்வெட்டுகளால் அறிகிறோம். இவற்றால், பல்லவர் காலத்தில் 63 நாயன்மார்களுட் பெரும்பாலார்க்குப் பல கோவில்களில் உருவச்சிலைகள் இருந்திருத்தல் வேண்டும் என்று கோடல் தவறாகாது. இந்தக் கருத்தைச் சுந்தரர் திருத்தொண்டத்தொகை உறுதிப் படுத்தல் காணத்தக்கது:

"சுந்தரர் திருவாரூரில் உள்ள தேவாசிரிய மண்டபத்தின் முன் திருத்தொண்டத்-தொகையைப் பாடினார். அம்மண்டபத்திற் கூடியிருந்த நாயன்மாரைத் தனித்தனியே வணங்கிச் சுந்தரர் பாடினார்" என்பது சேக்கிழார் கூற்று. 63 நாயன்மாருள் சுந்தரர் காலத்தில் உயிரோடு இருந்தவர் 13 பேர். ஏனைய 50 பேரும் அவருக்குக்காலத்தால் முற்பட்டவர் ஆவர். காலத்தால் முற்பட்ட அவருள் பலர் இரண்டு, மூன்று நூற்றாண்டுகட்கு முற்பட்டவர் அவர்களைச் சுந்தரர் தேவாசிரிய மண்டபத்திற் கண்டு தனித்தனி வணங்கினார் எனின், அந்நாயன்மார்களுடைய உருவச்சிலைகளைக் கண்டு வணங்கினார் என்பதுதானே நுட்பமாகக் கொள்ளத்தக்க பொருளாகும்? ஆகவே, ஆரூர்க் கோவிலில், சுந்தரர் காலத்தில், ஏறத்தாழ நாயன்மார் ஐம்பதின்மர் உருவச்சிலைகளேனும் எழுந்தருளப் பெற்றிருந்தன என்று நினைத்தல் பொருத்தமாகும் அல்லவா?

பிற்பட்ட பல்லவர்: கழற்சிங்கன் மகனான நிருபதுங்க வர்மன் காலத்தில் சைவ சமயம் மேலும் வளர்ச்சி பெற்றது. பாடல் பெற்ற கோவில்களுக்குப் பலர் நிபந்தங்கள் விட்டனர். நிருபதுங்கன் மனைவியான வீரமகாதேவி திருக்கோடிகாவில் ஹிரண்யகர்ப்பமும்,துலாபாரமும் புகுந்தனள். நிருபதுங்கன் மகனான அபராசித வர்மன் சிறந்த சிவபக்தன். அவன் காலத்தில் திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் கட்டப்பட்டது. அவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர்,சத்தியவேடு முதலிய இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. அவன் மனைவியான மாதேவி அடிகள் சிறந்த சைவப்பற்று உடையவள். பின்வந்த கம்பவர்மன் காலத்துக் கல்வெட்டால் திருவொற்றியூர்க் கோவிலை அடுத்து மடம் இருந்தது தெரிகிறது.

தளிப் பரிவாரம்: பல்லவர் காலத்துக் கோவில்கள் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தன. பெரிய கோவில் நடைமுறைகளைக் கவனித்து ஆட்சிபுரிய அமிர்த கணத்தார், தளி ஆள்வார் என்போர் இருந்தனர். மடங்களைக் கவனிக்க மடத்துப் பெருமக்கள் என்பவர் இருந்தனர். பூசை செய்பவரும், வாத்தியங்கள் வாசிப்பவரும்,ஆடுமகளிரும், பாடுமகளிரும், ஓதுவார்களும், கோவில்களைத் தூய்மை செய்பவரும், தவசிகளும் (சமையல் செய்பவர்) வேறு பல பணி செய்பவரும் எனப் பலவகையினர் இருந்தனர். தேவரடியார் "அடிகள்மார்" என்றும், நடனமாதர் "மாணிக்கத்தார்" என்றும் பெயர் பெற்றிருந்தனர். பல கோவில்கள் ஊர் அவையார் ஆட்சியில் இருந்தன.

மக்களுக்கு வழங்கிய நாயன்மார் பெயர்கள்: நாயன்மார் பெயர்கள் அக்கால இயற்பெயர்களாகவும், காரணப் பெயர்களாகவும் காண்கின்றன. அப்பெயர்கள், அக்கால மக்கள் வழக்கில் இருந்தனவாதல் வேண்டும் அல்லவா? அம்மக்கள் நாயன்மார் நினைவுக்கு அறிகுறியாக அப்பெயர்களை வைத்துக்கொண்டனரா,அல்லது அக்கால வழக்கப்படி அப்பெயர்கள் இடப்பட்டனவா என்பது திட்டமாகத் தெரியவில்லை. பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் நிரம்பக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை மிகச் சிலவே. அவற்றிற் காணப்படும் சில பெயர்கள் நாயன்மார் பெயர்களுடன் ஒரளவு ஒப்புமை உடையனவாகக் காண்கின்றன. அவற்றைக் கால முறைப்படி காண்க. (அட்டவணை காண்க.)

முடிவுரை: இதுகாறும் கூறிப்போந்த விவரங்களால் பல்லவர் காலத்தில் -
1. பாடல்பெற்ற கோவில்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தன.
2. கோவில்<களை அடுத்துப் பல பகுதிகளில் மடங்கள் தோன்றிச் சமயக் கல்வியைப் புகட்டி வந்தன.
3. கோவில்களில் திருப்பதிகங்கள் ஓரளவு ஓதப்பெற்று வந்தன.
4. நாயன்மார் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் அவர்தம் உருவச்சிலை எழுதருளப்பெற்று வழிபாடு நடைபெற்று வந்தது. ஆரூர்க் கோவில் போன்ற பெரிய கோவில்களில் நாயன்மார் பலருடைய உருவச் சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன.
5. பல கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன.
6. நாயன்மார் பெயர்கள் பல்லவர் கால மக்கள் கொண்டிருந்த பெயர்களோடு ஏறத்தாழ ஒன்று பட்டனவேயாகும். நாயன்மார்க்குக் காலத்தார் பிற்பட்ட மக்கள், அப் பெருமக்கள் பெயர்களைத் தாங்கி இருந்தமைக்கு அந்நாயன்மாரிடம் அவர்கள் கொண்டிருந்த சைவப்பற்றே சிறந்த காரணம் என்னலாம்.

மக்கள் பெயர்

நாயன்மார் பெயர்

1. மானி

இது மங்கயர்க்கரசியாரது இயற் பெயர்

2. தண்டி

தண்டியடிகள்

3. கலிப்பகை

திலகவதியார் கணவன் பெயர்.

4. புகழ்த்துணை வரிசையரசன்

புகழ்த்துணை நாயனார்.

5. நம்பி

நம்பி ஆரூரர்.

6. கம்பன்

கலிக் கம்ப(ன்) நாயனார்

7. கலிமூர்க்க இளவரையன் மூர்க்க நாயனார்

கலிக் கம்ப நாயனார்.

8. சடையன் பள்ளி

சடையனார் (சுந்தரர் தந்தையர்)

9. சிறு நங்கை, பெருநங்கை,போற்றிநங்கை

நங்கை பரவையார். வெண்காட்டு நங்கை (சிறுத் தொண்டர் மனைவி)

10. பூதி கண்டன்

அப்பூதி அடிகள்,

11. நந்தி நிறைமதி

நமி நந்தி அடிகள்

12. பாதிரிகிழார் சிங்கன்

கழற்சிங்கன்

13. குறும்ப கோளரி

பரசமய கோளரி (சம்பந்தர் பெயர்)

14. கஞ்சாறன் அமர்நீதி

மானக் கஞ்சாற நாயனார், அமர்நீதி நாயனார்

15. சக்திப் பல்லவன்

சக்தி நாயனார்.


இங்ஙனம் நாயன்மார் காலத்தில் வளர்ந்து வந்த சைவ சமயம், பல்லவர்க்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் (சேக்கிழார் காலம்வரை) எங்ஙனம் தளர்ச்சியடைந்தது, நாயன்மார் வரலாறுகள் - வழிபாட்டு முறைகள் - விழாக்கள் முதலியன எங்ஙனம் பலர் அறியச் சிறப்புப் பெற்றன. இவை அனைத்தும் எங்ஙனம் பெரியபுராணம் பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணைபுரிந்தன என்பதை அடுத்த பகுதியிற் காண்போம்.