நீர் விளையாட்டுப் படலம் - 1043
நீராட்டின்பின் கரையேறி யாவரும்
ஆடையணிகளை அணிதல்
நீராடியபின் ஆடையாபரணங்கள் அணிதல்
1043.
இனைய எய்தி இரும் புனல் ஆடிய.
வனை கருங் கழல் மைந்தரும். மாதரும்.
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறினார்.
புனை நறுந் துகில். பூணொடும் தாங்கினார்.
இனைய எய்தி - இப்படியாக; இரும்புனல் ஆடிய - பெரிய (நீர்
நிலைகளில்) நீராடிய; கருங்கழல் வனை - வலிய (வீரக்) கழல்களைப்
பூண்ட; மைந்தரும் - ஆடவரும்; மாதரும் - பெண்டிரும்; அனைய
நீர்வறிதாக - தம்மைப் பிரிதலால். அந்த நீர் நிலைகள் ‘வெறிச்’
சென்று ஆகும்படி; வந்து ஏறினார் - (அவற்றை விட்டு) வந்து (கரை)
யேறினார்; புனை நறுந்துகில் - (தாம்) புனைவதற்குரிய மணமுடைய
ஆடைகளை; பூணொடும் - அணிகலன்களோடும்; தாங்கினார் -
அணிந்து கொண்டனர்.
கோசல நாட்டு மக்கள் இருக்குமிடம் எல்லாம் செல்வம் கொழிக்கும்
திருவிடம் ஆதலால். அவர்கள் வெளியேறியுடன் பொய்கைகள்
வறிதாகிப் போயின என்றார். எங்கும். எதிலும் வளம் செழித்துக்
கிடப்பதே கவிஞர் பெரு விருப்பம். ஆதலின். மைந்தரும் மகளிரும்
வெளியேறினவுடன் பொய்கை வறிதாகப் போயிற்று என்று கவிஞர்
வருந்துகிறார். அவர்கள் நீர் உள்ளிருக்கையில். புனை நறுந்துகிலும்
பூண்ட அணிகலன்களும் உள்ளிருந்தன. பொய்கை செல்வம் பூரித்துக்
கிடந்தது. அவர்கள் வெளிப்போந்தவுடன் அவையும் வெளியேறின.
ஆதலால். “அனைய நீர் வறிதாக வந்து ஏறினாார்” என்றார். 30
