நீர் விளையாட்டுப் படலம் - 1044
நீராட்டின்பி ன்னர் நீர்நிலையின் காட்சி
1044.
மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்.
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும். உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும். போன்றதே.
மேவினார் பிரிந்தார் - (அந்நீர் நிலையுள்) விருப்பத்தோடு நீர்
விளையாடிய ஆடவரும் மகளிரும் (அங்கிருந்து) பிரிந்து சென்றனர்;
அந்த வீங்கு நீர்- (அதனால்) (நீர்) நிறைந்திருந்த அந்த நீர்
நிலையானது; தாவுதண் மதி தன்னொடும் தாரகை - தவழ்ந்து
செல்லும் குளிர் நிலாவும் விண்மீன்களும்; ஓவு வானமும் - விலகிச்
சென்று விட்ட ஆகாயத்தையும்; உள்நிறை தாமரைப் பூ எலாம் -
(தன்)னுள்ளே நிறைந்திருந்த தாமரை மலர்கள் யாவும்; குடிபோனதும்
போன்றது - வேறிடத்திற்குக் குடி பெயர்ந்து போய்விட்ட
பொய்கையையும் போல் ஆயிற்று.
தன்னிடம் நீராட வந்த அழகுபொலியும் கோசலநாட்டு ஆடவராலும்
மகளிராலும் தனியழகு பெற்றிருந்த நீர்நிலை. அவர்கள்
பெயர்ந்ததனால் விண்மீன்களை இழந்து போன வானத்தையும்.
தாமரை மலர்களை இழந்துவிட்ட தடாகத்தையும் போலப்
பொலிவிழநது போயிற்று என்று ஏங்குகிறார். “மீன் எலாம் சூழ நின்ற
விரிகதிர்த் திங்களையும்” “வண்ணப் பூவெலாம் மலர்ந்த பொய்கைத்
தாமரையையும்” (கம்ப. 943) உவமித்துள்ளார் ஆதலின். இங்கு.
“தண்மதி தன்னொடும். உள்நிறை தாமரைப் பூ எலாம் குடிபோனதும்
போன்றது” என்று பொருத்தமுற உவமித்தார். மகளிர்
வெளியேற்றத்தைப் “பூவெலாம் குடிபோனது போன்றது” எனல் மகா
கவிகட்கே வாய்க்கவல்ல சொல்லாட்சி எனலாம். 31
