நீர் விளையாட்டுப் படலம் - 1042

bookmark

நீரில் மூழ்கிய தாமரையின் தோற்றம்

1042.

தள்ளி ஓடி அலை தடுமாறலால்.
தெள்ளு நீரின் மூழ்கு செந்தாமரை.
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது.
உள்ளம் நாணி. ஒளிப்பன போன்றவே.
 
தள்ளி ஓடி அலை தடுமாறலால் - (நீராடலால் தம் நிலையிலிருந்து)
தள்ளப்படுதலால்.  பரந்து  சென்று  அலைகள் தடுமாறுவதால்; தெள்ளு
நீரின்   -   தெளிந்த  (அந்த  நீர்  நிலையின்)  தண்ணீரில்;  மூழ்கு
செந்தாமரை - மூழ்கிப் போகின்ற செந்தாமரை மலர்கள்; புள்ளி மான்
அனையார்  -  புள்ளி  மானைப்  போன்ற அங்குள்ள  மகளிருடைய;
முகம்  போல்  கிலாது  - முகங்களைப் போன்றிருக்க இயலாமையால்;
உள்ளம்  நாணி -  மனத்திற்குள் வெட்கமுற்று; ஒளிப்பன போன்ற -
(நீருக்குள்) மறைவன போன்றன.

ஏ-அசை     -   தற்குறிப்பேற்ற   அணி.  தள்ளி ஓடி (அலைகள்)
ஒன்றையொன்று  தள்ளிக் கொண்டு ஓடி எனினுமாம்.  புனல்  ஆடுவார்
பலராதலால்.  அலைகள்  எழுவதும்  விழுவதுமாகப்  பல  ஆகின்றன.
அதனால்.   ஆங்குள்ள   தாமரைகள்    முழுகுவதும்   எழுவதுமாகத்
தடுமாறுகின்றன.  இதனை  மனக்  கண்ணாற் கண்ட  கவி.  புள்ளிமான்
அனையார்  முகம்  போல்கிலாதது  கண்டு  உள்ளம் நாணி  ஒளிப்பன
போன்றிருந்தன   என்று   தன்   கருத்தையேற்ற   அழகூட்டினார்  -
தற்குறிப்பேற்ற   அணி.   நீரில்    மூழ்கிய    தாமரைகள்   மீண்டும்
வெளிப்படுமாதலின்.  மூழ்கின  போன்றவே   என்னாமல்   “ஒளிப்பன
போன்றவே” என்றார்.                                       29