நீர் விளையாட்டுப் படலம் - 1034

bookmark

ஆடவரும் மகளிரும் ஆடிய புனலின் தோற்றம்

1034.

மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்.
ஒக்க. நீல முகில்தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது. அத் தீம் புனல்.
 
மிக்க   வேந்தர் தம் -  மிகுதியாக வந்த வேந்தர்களுடைய; மெய்
அணி  சாந்தொடும்  -  உடம்பில்   அழகு  செய்த  செஞ்  சந்தனக்
குழம்போடும்;   புக்க   மங்கையர்   -    அவ்வேந்தரோடு   வந்த
மங்கையருடைய;  குங்குமம்  போர்த்தலால்  -   குங்குமக்  குழம்பும்
(தன்னிடத்தே)  நிரம்பியதனால்;  அத் தீம் புனல் -  அந்த இனிய நீர்
வெள்ளம்; நீல முகில் தலை ஒக்க ஓடிய - கருநிற  மேகங்களில் ஒரு
சேரப்   பரவிய;   செக்கர் வானகம்  ஒத்தது  -   செவ்வானத்தைப்
போன்றது ஆயிற்று.

சார்ந்ததன்     வண்ணம் ஆதல் உயிர்க்கு  இயல்பு என்பர்;  இங்கு
நீர்க்கும்  இயல்பு  ஆயிற்று  எனச்  சுவையுறக்  கூறினார்.  ஒக்க ஓடிய
எனக்  கூட்டுக.  நீர்.  நீல  வானிற்கும்.  மகளிர்  மைந்தர்  நீராடலால்
கரைந்து   கலந்த   செஞ்சாந்தும்  குங்குமமும்  அந்திச்    செவ்வான
மேகத்திற்கும் உவமைகள் ஆயின.                             21