நீர் விளையாட்டுப் படலம் - 1035

bookmark

கலவைப் பூச்சு நீங்கப் பெற்ற மகளிரின் தோற்றம்

1035.

காகதுண்ட நறுங் கலவைக் களி.
ஆகம் உண்டது. அடங்கலும் நீங்கலால்.
பாகு அடர்ந்த பனிக் கனி வாய்ச்சியர்.
வேகடம் செய் மணி என. மின்னினார்.
  
ஆகம்     உண்டது - உடம்பிற் பூசப் பெற்ற; காக துண்ட நறுங்
கலவைக்   களி   -  அகிலோடு  சேர்ந்த  நறுமணமுடைய  சந்தனக்
குழம்புகள்;   அடங்கலும்  நீங்கலால்   -   (நீரில்  மூழ்கியாடலால்)
முழுவதும்   அழிந்துவிட்ட   படியால்;   பாகு  அடர்ந்த  பனிக்கனி
வாய்ச்சியர்  -  பாகின்  இனிமை  மிக்க.  குளிர்ந்த  கொவ்வைக் கனி
போன்ற  வாயினையுடைய  அம்மகளிர்;  வேகடம்  செய்  மணி என
மின்னினார்  -  சாணை  பிடிக்கப் பெற்ற மாணிக்கக் கற்களைப் போல்
விளங்கினர். 

காக   துண்டம் -  அகில். “ஏந்து எழிற் காக துண்டம்” (சூளா. சீய.
105) என்பர். மகளிர் அங்கங்களின்  இயற்கை  யழகினை  மறைத்திருந்த
செஞ்சாந்து  முதலிய  மணப்  பொருள்கள்   நீரில்  குளித்தெழுகையில்
அழிந்து  போய்  விட்டதனால் அப் பெண்டிர்   சாணை  பிடித்தெடுத்த
இரத்தினங்கள் போல் விளங்கினர் என்று அழகுற வருணித்தார்.     22