நீர் விளையாட்டுப் படலம் - 1030
நீரில் மூழ்கிய ஓர் பெண்ணின் தோற்றம்
1030.
தேரிடைக் கொண்ட அல்குல்.
தெங்கிடைக் கொண்ட கொங்கை.
ஆரிடைச் சென்று கொள்ள
ஒண்கிலா அழகு கொண்டாள்.
வாரிடைத் தனம் மீது ஆட
மூழ்கினாள்; வதனம். மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள்
நிழல்என. பொலிந்தது அன்றே!
தேர் இடைக் கொண்ட அல்குல் - தேரிடத்திலிருந்து பெற்ற
அல்குலையும்; தெங்கு இடைக் கொண்ட கொங்கை -
தென்னையிலிருந்து பெற்ற தனங்களையும்; ஆர் இடைச் சென்றும் -
எவரிடத்திற்சென்றாலும்; கொள்ள ஒண்கிலா அழகு - பெற இயலாத
அழகினையும்; கொண்டாள் - கொண்டிருப்பவளும்; வார் இடைத்
தனம் - கச்சையணிந்த தனங்கள்; மீது ஆட மூழ்கினாள் - மேலே
ததும்ப மூழ்கினவளும் ஆகிய ஒருத்தியின்; வதனம் - முகமானது;
மைதீர் நீரிடைத்தோன்றும் - (தூய) நீரிலே (தெளிவுறத்)
தோன்றுகின்ற; திங்கள் நிழல்எனத் தோன்றிற்று - சந்திரனுடைய
பிம்பம் போல் விளங்கியது.
நிதம்பத்திற்கும் தனத்திற்கும் தேர்த்தட்டும் குரும்பையும்
உவமைகள் ஆதலால். “தேரிடைக்கொண்ட அல்குல். தெங்கிடைக்
கொண்ட கொங்கை” என்றார். உவமையணி. மேலும் “மின் வயின்
மருங்குல் கொண்டாள் வேய் வயில் மென்தோள் கொண்டாள். பொன்
வயின் மேனி கொண்டாள்”. (கம்ப. 3133) என்பார். யாரிடத்திருந்தும்
இனிப்பெற வேண்டாது எல்லா அழகும் தன்னிடத்திலேயே நிறைந்த
தன் நிறைவு நிலையடைந்தவள் என்பார். “ஆரிடைச் சென்றும்
கொள்ள ஒண்கிலா அழகு” என்றார். மூழ்கும் அழுத்தத்தால்.
கச்சிலிருந்தும் வெளியேறி மேலிருந்தது தனம் என்பார். “வாரிடைத்
தனம். மீது ஆட மூழ்கினாள்” என்றார். வான்நோக்கியவாறு நீருள்
மூழ்கியிருப்பாள் அங்கங்களை வருணித்த கவிஞர். இறுதியாக
முகத்தை நீரில் மூழ்கிக் கிடந்த சந்திரபிம்பம் என்றார். 17
