நீர் விளையாட்டுப் படலம் - 1031
வெள்ளம் பரவுதல்
நீராடிய பொய்கையும் பூம்புனலும்
கலிவிருத்தம்
1031.
மலை கடந்த புயங்கள். மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல். கடம் படு
முலைகள். தம்தமின் முந்தி நெருங்கலால்.
நிலை கடந்து பரந்தது. நீத்தமே.
மலை கடந்த புயங்கள் - மலைகளையும் (வலிமையில்) வென்ற
(ஆடவரின்) தோள்களோடு;கலைகடந்து அகல் மடந்தைமார் அல்குல்
கடம்படு முலைகள் - ஆடைக்குள் அடங்காமல் அகன்றுள்ள
பெண்டிரின் அல்குலும். குடங்களைப் போன்ற (அவர்) தனங்களும்;
தந்தமில் முந்தி - ஒன்றுக்கொன்று முந்தி; நெருக்கலால் - மோத
முற்படுவதால்; நீத்தம் நிலைகடந்து பரந்தது - (நீர்நிலையிலுள்ள)
வெள்ளம் தன் நிலையைக் கடந்து (வெளியே) வழியில் ஆயிற்று.
புயங்கள் - புயங்களோடு - மூன்றன் தொகை. கொள் அளவிற்கு
மேல் பொருள்களை இட்டால் நீர் வழிவது இயல்பு. இங்குக் கூறிய
மூன்று உறுப்புக்களும் அளவிற் பெரியன எனக் கூறுதல் கவிமரபு
ஆதலின். அவை மூன்றும் ஒன்றாய் நெருக்குதலின் “நிலை கடந்து
பரந்தது நீத்தம்” என்றார். நீத்தம் - வெள்ளம்; அது இங்கு நீர்
என்னும் அளவில் நின்றது. வழிந்தோடும் மிகுதியும் வேகமும்
கொண்டு வெள்ளம் என்றார் எனினுமாம். “மலை கடந்த புயம்”
என்பதனை மலைகள் தந்த புயம் எனக் கொள்ளினும் அமையும். 18
