நீர் விளையாட்டுப் படலம் - 1029
நீரிடைத் தோன்றும் மங்கை முகம்
1029.
மிடலுடைக் கொடிய வேலே என்ன
வாள் மிளிர்வது என்ன.
சுடர் முகத்து உலவு கண்ணாள்.
தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும்
வளர் கொடி பலவும் சூழ.
கடலிடைத் தோன்றும் மென் பூங்
கற்பக வல்லி ஒத்தாள்.
மிடல் உடைக் கொடிய வேலே என்ன - (ஆடவர் நெஞ்சில்
ஊடுருவலில்) வலிமையுடைய கொடிய வேலே போன்று; வாள்
மிளிர்வது என்ன - (ஒளிர்வதில்) வாள் (ஒன்று) மின்னுவதே போன்று;
சுடர்முகத்து உலாவு கண்ணாள் - ஒளிர்கின்ற முகத்திலே உலாவுகின்ற
இருகண்களையுடையவளாய்; தோகையர் சூழ நின்றாள் - மயில்
அனைய மகளிர் சூழ்ந்து நிற்க (இடையே) நின்ற ஒருத்தி;
மடல்உடைப் போது காட்டும் - இதழ்களையுடைய மலர்களைத்
தோற்றுவிக்கும்; வளர்கொடி பலவும் சூழ - வளர்ச்சியுடைய கொடிகள்
பலவும் சூழ்ந்திருக்க; கடலிடைத் தோன்றும் - திருப்பாற் கடலிலிருந்து
வெளிவந்த; மென்பூங் கற்பக வல்லி ஒத்தாள் - மெல்லிய
மலர்களைக்கொண்ட கற்பக வல்லியே போன்றிருந்தாள்.
மண்ணகத்து மலர்க் கொடிகளுக்கிடையே. விண்ணகத்து
படர்கொடிகளாய் மகளிரிடையே அவள் விளங்கினாள் என்பதாம்.
கற்பகவல்லி - வான் உலகக் கற்பகத்தருவில் படரும் கொடி. “வேலே
என்னலாய்” என்றும் பாடம். வேல். மகளிர் கண்ணிற்கு உவமை
யாதல்: “ஓக்கிய முருகன் கைவேல் ஓர் இரண்டு
அனைய கண்ணாள்” (சீவக. 129) வேல். மகளிரின் நேரான
பார்வைத்தாக்கிற்கும். வாள். பக்கங்களில் சுழன்று வீசும் தாக்கிற்கும்
உவமையாம். இக்கண்களால் முகம் ஒளிபெறுகிறது என்பார். “சுடர்
முகத்து உலவு கண்ணாள்” என்றார். தோகையர் பலரும் சூழநின்ற
அவளுக்கு. கொடிகள் பல சூழநின்ற கற்பக வல்லி - இல்பொருள்
உவமையாம். 16
