நீர் விளையாட்டுப் படலம் - 1028
மகளிர் இடையே நின்ற ஓர் தலைவியின் தோற்றம்
1028.
மேவல் ஆம் தகைமைத்து அல்லால்.
வேழ வில் தடக் கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற
இணை நெடுங் கண் ஓர் ஏழை.
பாவைமார் பரந்த கோலப்
பண்ணையில் பொலிவாள். வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத்
தாமரை பொலிவது ஒத்தாள்.
மேவல் ஆம் தகைமைத்து அல்லால் - (காண்பாரால்)
விரும்பப்படும் தன்மையைப் பெற்றிருப்பது மட்டும் அல்லாமல்;
வேழவில் தடக்கை வீரற்கு - கரும்பு வில்லை அகன்ற கையில் ஏந்திய
(மா) வீரனாகிய மன்மதனுக்கு; ஏ எலாம் காட்டுகின்ற -
கைக்கொள்ளும் அம்புகள் யாவும் உவமையால் தன்னிடம் கொண்டு
நிற்கின்ற; இணை நெடுங்கண் ஓர் ஏழை - இரண்டு நீண்ட
கண்களையுடைய மடந்தை ஒருத்தி; பாவை மார் பயந்த -
பணிப்பெண்கள் செய்த அலங்காரத்தால் விளங்கும் இவள்; கோலப்
பண்ணையில் - அழகினையுடைய மகளிர் கூட்டத்தின் இடையே
(தனித்து); பொலிவாள் -விளங்குபவளாய்; வண்ணப் பூவெலாம்
மலர்ந்த பொய்கை - அழகிய (குவளை. நெய்தல் முதலிய)
பூக்கள் எல்லாம் மலர்ந்துள்ள பொய்கையில்; தாமரை பொலிவது
ஒத்தாள் - (ஒரு) தாமரைப்பூ (தனித்து) விளங்குவதைப்
போன்றிருந்தாள்.
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே யாதலின் மலர்களின்
அரசியாய்த் தாமரை விளங்குவதுபோல. மகளிரின் அரசியாய் இவள்
விளங்கினாள் என்க. “ஒரு தனியோங்கிய திருமலர்
போன்று......(மணிமே. 15.75-77). ஏ: அம்பு. பண்ணை - மகளிர்
கூட்டம்.
அருவமாய் உருவமற்ற மனத்தையும் எய்ய வல்ல மன்மதனுக்கும்
அம்புகளை வழங்கவல்ல கண்களையுடையாள் என வியந்து கூறினார்.
மும்மூர்த்திகளையும் துணைதேட வைத்தவன் ஆதலின் மன்மதனை.
“வீரன்” என்றார். உருவுடன் இயைந்த போது சிவபிரானையும்.
உருவிலியான போது உலகோரையும் வயப்படுத்தும் வீரன் அவன்
என்க.
மேல் மூன்று பாடல்களிலும். மகளிர் சூழ நின்ற ஆடவரை
வர்ணித்த கவி. இப்போது பெண்டிர் சூழ பெண்ணை
வருணித்தவாறு. 15
