நகர் நீங்கு படலம் - 1860
இராமன் புறப்பாடு
1860.
என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்.
என்றபின்- இராமன் இவ்வாறு கூறிய பிறகு; முனிவன் - வசிட்டன்;
ஒன்று இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது;
நெடுங்கண் நீர்நிலத்து நீர்த்து உக - நீண்ட தன் கண் நீரானது
நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் - மலை
போன்ற தோள்களை உடைய இராமன்; தொழுது- (முனிவனை) வணங்கி;
கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னாற
செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச்
சேர்ந்தான்.
குன்றன தோளவனைப் தொழுது கொற்றவனாய இராமன் நெடுமதில்
வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் ‘குன்றன
தோளவன்’ எனல்ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக.
நீர்த்து - நீரின் தன்மை. செய்து அதாவதுஈரம் செய்து என்பதாகும். 165
