நகர் நீங்கு படலம் - 1858
வசிட்டன் மறுமொழி
1858.
‘ “ வெவ் வரம்பை இல் சுரம்
விரவு” என்றான் அலன்;
தெவ்வர் அம்பு அனைய சொல்
தீட்டினாள்தனக்கு,
அவ் அரம் பொருத வேல்
அரசன், ஆய்கிலாது,
“இவ் வரம் தருவென்” என்று ஏன்றது
உண்டு’ என்றான்.
(அது கேட்ட வசிட்டன் இராமனை நோக்கி)‘வெவ் - கொடிய;
வரம்பை இல் - எல்லை இல்லாத; சுரம்- காட்டை; விரவு’ - சேர்வாய்;
என்றான்அலன்’ - என்று உன்னைப் பார்த்துஅரசன் சொன்னானில்லை;
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு- பகைவரது
கணையை ஒத்த கொடிய வார்த்தையை மேலும் கொடுமையாகச் சொன்ன
கைகேயிக்கு; அவ் அரம் பொருத வேல் அரசன் -அந்த அரத்தால்
அராவிக் கூர்மை செய்யப்பெற்ற வேலை உடைய தசரதன்;ஆய்கிலாது-
ஆராயாமல்; ‘இவ் வரம் தருவென்’ என்று ஏன்றது உண்டு- இந்த
வரத்தைத் தருவேன் என்று ஒப்புக்கொண்டது உண்டு அவ்வளவே;
என்றான்-
தயரதன் உன்னைக் காட்டுக்கு ஏகும்படி நேராக ஆணையிடவில்லை.
கைகேயிக்கு வரம் தந்தேன் என்று ஒப்புக்கொண்ட அளவேதான். ஆகவே,
இதில் அரசனது ஆணையை மீறல் என்பது இல்லை என்று இராமனுக்கு
வசிட்டன் கூறினான். வரம்பை; வரம்பு; ஐகாரம் சாரியை. 163
