நகர் நீங்கு படலம் - 1856
வசிட்டன் இராமனைத் தடுத்தல்
1856.
வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை
உற்று அடைந்து, ‘ஐய! நீ ஒருவி, ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின், கண் அகல்
மல் தடந் தானையான் வாழ்கிலான்’ என்றான்.
(வசிட்டன்) வில் தடந் தாமரைக் செங்கண் வீரனை - வில் ஏந்திய
பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை; உற்று
அடைந்து - நெருங்கி வந்து; ‘ஐய!-; நீ ஒருவி - அரண்மனையை
விட்டு நீங்கி; ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் - உயர்ந்த மலை
வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் - இட மகன்ற; மல் தடந்
தானையான்- வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்’-
வாழ மாட்டான்; (இறந்துபடுவான்); என்றான் -. 161
