நகர் நீங்கு படலம் - 1849
1849.
‘ “மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய்” என
ஏறின வெகுளியை, யாதும் முற்றுற
ஆறினை, தவிர்க்க’ என, ‘ஐய! ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம்’ என்றான்.
‘ஐய! - இராமனே; ‘நீ வனம் கொள்வாய்’ என- நீ காடு செல்வாய்
என்பது கேட்டு; ஏறின வெகுளியை - எனக்கு மேல் மிகுந்த சினத்தை;
“யாதும் முற்றுற - சிறிதும் இல்லாதபடி போக; ஆறினை, தவிர்க்க’ -
அடங்கிநீங்குக;” என - என்று; ஆணையின் - கட்டளையாக; கூறிய
மொழியினும் - (நீ) முன்பு கூறிய சொல்லைக் காட்டிலும்; கொடியது ஆம்-
(இப்போது கூறியஇச்சொல்) கொடுமை உடையது ஆகும்; இனி மாறு
என்னை?- இனி இச்சொல்லுக்கு ஒப்பாகச்சொல்லத்தக்கது வேறு என்ன
உள்ள;’ என்றான் -
‘சினம் தவிர்க’ என்று சொன்னதைவிட, ‘அயோத்தியில் தங்குக’ என்ற
சொல் மிகக்கொடிது என்றான் இலக்குவன். 154
