நகர் நீங்கு படலம் - 1850

bookmark

1850.    

‘செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை,
கை துடைத்து ஏகவும் கடவையோ? - ஐயா!
நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்!’

     ‘ஐயா!-;நெய் துடைத்து - நெய்யால் துடைக்கப்பட்டு; அடையலர்-
பகைவரது; நேய மாதர் - அன்புடை மனைவியரது; கண்மை துடைத்து-
கண்ணில்எழுதிய மையை அழித்து; உறை புகும் -உறையின்கண்
தங்குகின்ற;  வயம் கொள் -வலிமை கொண்ட; லேலினாய்! - வேலை
உடையவனே;  செய்துடைச் செல்வமோ- நின்முன்னோர்களால்
தேடப்பெற்றுப் பரம்பரை முறையால் நினக்குரியதாகி உள்ளசெல்வமாகிய;
யாதும் தீர்ந்து - எல்லாவற்றையும் நீங்கி; எமைக்கை துடைத்து-
எங்களையும் கைவிட்டு;  ஏகவும் கடவையோ?- (காட்டிற்குப்)
போவதற்கும் கடவாயோ.

     துருப் பிடிக்காமைப் பொருட்டு வேலுக்கு நெய் பூசுதல் வழக்கம்
ஆதலின், ‘நெய்யால்துடைத்து’ என்றார். பகைவரைப் போரில்
கொல்லுதலின் அவர் காதலியர் அழுத அழுகையால்அவர்தம் கண் மை
கரைந்து அழியும் ஆதலின், ‘கண் மை துடைத்தது’  வேல் என்று
எண்ணினேன், எங்களையும் கைவிட்டுச் செல்லத் தயாராகி விட்டாயோ?
என்றான் - எமை  என்றது  சீதையையும் உளப்படுத்தியதாகும்.       155