நகர் நீங்கு படலம் - 1837

மரவுரி வருதல் (1837-1838)
கைகேயி மரவுரி அனுப்புதல்
1837.
தாய், ஆற்றுகிலாள்தனை,
ஆற்றுகின்றார்கள் தம்பால்,
தீ ஆற்றுகிலார், தனிச்
சிந்தையினின் செற்ற
நோய் ஆற்றுகில்லார் உயிர்
போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள் தர,
வற்கலை ஏந்தி வந்தார்.
ஆற்றுகிலாள் தாய்தனை - துயரத்தை ஆற்றமாட்டாதவளாய்
உள்ள தாய் சுமித்திரையை;ஆற்றுகின்றார்கள் தம்பால்- தேற்றித்
தெளிவிக்கின்ற அந்த இராமலக்குவர்கள் இடத்தில்; தீஆற்றுகிலார் -
பிரிவுத் தீயை அணைக்கமாட்டார்; தனிச்சிந்தையினின்று செற்றநோய் -
துணையற்ற தனித்த மனத்திலிருந்து கொல்லுகின்ற வேதனையை
ஆற்றுகில்லார் - ஆற்ற மாட்டாத; உயிர் போல நுடங்குஇடையார் -
நுண்ணியதாகிய உயிர்போலத் துவளுகின்ற இடையை உடைய மகளிர்;
மாயாப் பழியாள் தர -என்றும் அழியாத பழியைஉடைய
கைகேயியானவள் கொடுத்தனுப்ப; வற்கலை ஏந்தி வந்தார்-மரவுரியைச்
சுமந்து வந்தார்கள்.
ஏவர் மகளிர்ஆயினும் அவரும் இராமன் பிரிவுத் துயரத்தால்
துடிக்கின்றனர். அவர்கள்கையில் மரவுரி கொடுத்து அனுப்பினாள்
கைகேயி என்பதாம். முன்பும் “கைகேசியும் கொடியகூனியும் அல்லாமல்
கொடியார் பிறர் உளரோ” என்ற (1704.) படியாள் இவ்விருவர் தவிரமற்றவர்
அனைவரும். துயரால் துடிக்கின்றவர்களே என்பது போந்தது. ‘ மாயாப்
பழியாள்’ கைகேயி பின்பும் பரதன்’ மாயா வன்பழி தந்தீ்ர்’ (2177.) என்பது
காண்க. வன்கலை - வலிய ஆடை, மாவுரி - ‘வற்கலா’ என்னும் வடசொல்
வற்கலை எனத்தமிழ்முடிபு பெற்றது எனலாம். 142