நகர் நீங்கு படலம் - 1838

1838.
கார் வானம் ஒப்பான்தனைக்
காண்தொறும் காண்தொறும் போய்
நீர் ஆய் உக, கண்ணினும்
நெஞ்சு அழிகின்ற நீரார்,
‘பேரா இடர்ப்பட்டு அயலார்
உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர,
‘வந்தன சீரம்’ என்றார்.
கார் வானம் ஒப்பான்தனை - மழை மேகத்தை ஒத்த கருமையும்
தண்மையும் உடையஇராமனை; காண்தொறும் காண்தொறும் - பார்க்கப்
பார்க்க; கண்ணினும் போய் - பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்;
நீர் ஆய் உக - நீராகிச் சிந்த; நெஞ்சு அழிகின்ற நீரார் - மனம்
கெட்டு வருந்துகின்ற தன்மையுடைய ஏவல் மகளிர்(இராமனைப் பார்த்து)
‘பேரா இடர்ப்பட்டு - நீங்க முடியாத துன்பப் பட்டு; அயலார் உறு
பீழை கண்டும் - அயலார்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு வைத்தும்;
தீரா மன்த்தாள் - தன் கொள்கையிலிருந்து நீங்காத மனம் உடைய
கைகேயி; தர -கொடுத்தனுப்ப; வந்தன சீரம் - வந்தனவாகிய மரவுரி
இவை; என்றார் -
நேரில் இராமனைக் காணும்போது மேலும் நெஞ்சு புண்ணாகிறது
அச்சேடியர்களுக்கு. சேடியரது உள்ளத் துயர் இப்பாடலில்ல தெள்ளத்
தெளிவு ஆகும். 143