நகர் நீங்கு படலம் - 1825

இலக்குவன் மறுமொழி
1825.
உதிக்கும் உலையுள் உறு தீ என
ஊதை பொங்க,
‘கொதிக்கும் மனம் எங்ஙனம்
ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல்
வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என்
வில் - தொழில் காண்டி’ என்றான்.
உலையுள் உதிக்கும் உறு தீ என ஊதை பொங்க - (கொல்லன்)
உலைக்களத்துள்பிறக்கின்ற மிக்க நெருப்பைப் போல வெப்பமான
பெருமூச்சு மேலே பொங்கிவர; ‘கொதிக்கும் மனம் - வெம்புகின்ற
மனத்தை; எங்ஙனம் ஆற்றுவென் - எவ்வாறுதணியச் செய்வேன்;
கோள் இழைத்தாள் - தீங்கு செய்தவளாகிய கைகேயியின்; மதிக்கும் மதி
ஆய் - அறிவுக்கும் அறிவு தருவதாய்; முதல் வானவர்க்கும் - மும்
மூர்த்திகளாய தேவர்களுக்கும்; வலிது ஆம் - வலிமையான; விதிக்கும்
விதி ஆகும் - (நீ சொல்லிய) ஊழ்வினையையும் வென்று மாற்ற வல்ல
ஊழ் ஆகிய; என் வில் தொழில்காண்டி’ - எனது வில்லின் செயலைப்
பார்ப்பாயாக;’ என்றான் -.
விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற
வல்ல விதி என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற மனத்தை ஆற்ற
முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்;
பின்னர் இதற்கு ஏதாவது முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும்
என்பதாகப் பேசுகிறான். 130