நகர் நீங்கு படலம் - 1736

கைகேயியின் மறுமொழி
1736.
மொய்ம் மாண் வினை வேர் அற வென்று
உயர்வான் மொழியாமுன்னம்
விம்மா அழுவாள், ‘அரசன்
மெய்யின் திரிவான் என்னில்,
இம் மாண் உலகத்து உயிரோடு
இனி வாழ்வு உகவேன்; என் சொல்
பொய்ம் மாணாமற்கு, இன்றே,
பொன்றாது ஒழியேன்’ என்றாள்.
மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் -
நெருங்கிய ஆற்றல் அமைந்தவினைகளை அடியோடு போம்படி வெற்றி
கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்; மொழியாமுன்னம் - சொல்லிய
அளவில் (கைகேயி); விம்மா அழுவாள் - விம்மி அமுது; ‘அரசன்
மெய்யின் திரிவான் என்னின் - சக்கரவர்த்திதான் கொடுத்தவரமாகிய
சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உளகத்து உயிரோடு
இனி வாழ்வு உகவேன் -இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில்
உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என்சொல் பொய்ம்
மாணாமற்கு - என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே-இன்றைக்கே;
பொன்றாது ஒழியேன் - இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்-.
அரசன் சொன்ன சொல் தவறினாலும், நான் சொல்லிய சொல்லிருந்து
தவற மாட்டேன்,தவறினால் உயிர்துறப்பேன் என்றாள் கைகேயி. அழுவாள்-
முற்றெச்சம். 42