நகர் நீங்கு படலம் - 1737

முனிவன் முனிந்து மொழிதல் (1737-1739)
1737.
‘கொழுநன் துஞ்சும் எனவும்,
கொள்ளாது உலகம் எனவும்,
பழி நின்று உயரும் எனவும்,
பாவம் உளது ஆம் எனவும்,
ஒழிகின்றிலை; அன்றியும், ஒன்று
உணர்கின்றிலை; யான் இனிமேல்
மொழிகின்றன என்?’ என்னா,
முனியும், ‘முறை அன்று’ என்பான்.
முனியும் - வசிட்டனும் (கைகேயியை நோக்கி); ‘கொழுநன் துஞ்சும்
எனவும் -கணவன் இறந்துபடுவான் என்றும்; உலகம் கொள்ளாது
எனவும் - உலகம் இக்கருத்தைஏற்றுக்கொள்ளாது என்றும்; பழி நின்று
உயரும் - (இம்மையில்) பழிச்சொல்நின்பால் தங்கி ஓங்கும் என்றும்;
பாவம் உளது ஆம் எனவும் - (மறுமைக்குப்) பாவமும்இதனால்
உண்டாகும் என்றும்; ஒழிகின்றிலை - (கருதி உன் கருத்தை)
நீக்கிக்கொள்வாயல்லை; அன்றியும் ஒன்று உணர்கின்றிலை - அதன்
மேலும் நான் சொல்லுகிற ஒன்றையும் உணர்வாய் அல்லை; யான் இனிமேல்
மொழிகின்றன என்?’ - நான்இனிமேல் உனக்குச் சொல்கின்ற
வார்த்தைகளால் என்ன பயன்;’ என்னா - என்றுசொல்லி; ‘முறை அன்று’
என்பான் -‘நீ செய்யும் செயல் நேர்மையானது அல்ல’என்பானானான்.
‘ஏவவும் செய்கலான் தான் தேறான்’ என்பது போல (குறள் 848.)
உள்ளான் கைகேயி என்பது முனிவன் கருத்து. இறுதியாக நீ செய்யும்
செயல் தர்மத்துக்கும் நியாயத்துக்கும் ஒத்தது அன்று என்று கைகேயியை
நோக்கிக் கடிந்துரைத்தான் வசிட்டன். 43