தூக்குமேடை நோக்கி...
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.”
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.
“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார். அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.
சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
