புரட்சியால் மட்டுமே முடியும்!

புரட்சியால் மட்டுமே முடியும்!

bookmark

பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.

பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.

பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.