தந்தை பெரியார் - 3
ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இராமசாமி கைது செய்யபட்ட போதிலும் இராமசாமியின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தைத் தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுமுதல் இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்றும் காந்தி அரிசன மக்களுக்கு ஆதரவாக எந்தப்போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்தவில்லை என்றும் இக்கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் ஸ்ரீ நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர். பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது.
இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்க்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர். ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது. சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுபாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது. கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது. இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.
இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. பெண் விடுதலைக்காக தீவிரமாக முன்னெடுத்தார்.பெண்களைக் காந்திய இயக்கத்தின் மூலம் முதலில் அரசியலுக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்த வர அதற்குப் பின்னர் திராவிட இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்தார்.
இளையவராக இருந்தாலும் வாங்க, போங்க என்றே அழைப்பார். நேருக்கு , நேராக விமர்சிப்பதை வரவேற்றார். பேசிக் கொண்டு இருக்கும் போது வரும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது அவரது வழக்கம்.மேடையில் பேசிக் கொண்டு இருந்த பொது தொடர்ந்து ஒருவர் வினாக்களைத் தொடுத்துக் கொண்டே இருந்தார்.பெரியாரும் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.இறுதியில் அவருடைய பேனா தீர்ந்து போனது. பெரியார் தன்னுடைய பேனாவை எடுத்து நீட்டினார்.
