தந்தை பெரியார் - 4

தந்தை பெரியார் - 4

bookmark

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலாக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார்.

இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.

நடிகர்கள் சிலர் அரசியலில் நடமாடிய காலத்தில், நடிகர்களால் நாட்டுக்கு வரும் பயனை விடத் தீங்கே அதிகம் என்றும் அவர்கள் வெறும் கூத்தாடிகள் என்றும் விமர்சித்தார்.கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள் வாழ்த்துப் பாடினால் எழுந்து நிற்பார்.திரு.வி. க. அவரைப் பார்க்க வந்தபோது அவருக்கு விபூதி அணிய தானே பாத்திரத்தை நீட்டினார்.சில கோயில்களின் அரங்காவலராகச் சிறப்பாகப் பணியாற்றினார். வாழ்நாள் முழுக்கு கருத்து ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ராஜாஜியை எதிர்த்தாலும். ராஜாஜி இறந்த சமயத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

இன்னும் பெரியாரின் பண்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். காந்தியை கருத்து ரீதியாக ஓயாமல் எதிர்த்த பெரியார்.காந்தி பின் நாளில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தியைக் கேட்ட போது மிகவும் மனம் வருந்தினார். கோட்சே தூக்கிலடப்பட்ட தினத்தை தீபாவளிக்கு பதில் கொண்டாட வேண்டும் என்று முழங்கினார். அத்துடன் நிற்காமல் " சுடப்பட்டவர் சுயமரியாதைக்காரர் காந்தியார்" என்று குறிப்பிட்ட அவர் காந்திஸ்தான் என்று இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் எழுதினார்.

1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1958 இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் இராமசாமி தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர் , திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது.

இராமசாமியின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

பெரியார் இறந்த போது எந்த அரசுப் பதவியிலும் இல்லாததால் அவருக்கு எப்படி அரசு மரியாதை செய்வது என்று அதிகாரி ஒருவர் கேட்டார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் இப்படி பதில் அளித்தார் "காந்தி அவர்களும் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் அவர் தேசப்பிதா என்பதால் மரியாதைகள் செய்யப்பட்டது இல்லையா? அது போல தமிழ் நாட்டின் தந்தை பெரியார்!" என்றார். இவ்வாறு சகல மரியாதைகளோடு அவரின் இறுதி ஊர்வலம் அப்போதைய தமிழக அரசு சார்பாக நடை பெற்றது.