தந்தை பெரியார் - 2

தந்தை பெரியார் - 2

bookmark

இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.

பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிரமணரால்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிரமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றதாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட பெரியார்,பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நீதிமன்றம் செல்லாமல் இழந்தார். பல் ஏக்கர் மரங்களில் கள் இறக்குவதை நிறுத்தி அவற்றை வெட்டிச் சாய்த்தார்.ஊர், ஊராகச் சென்று கதர் விற்றார்.காங்கிரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார், அது மட்டும் அல்ல வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி. கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னிபெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாக்கிரகப்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.

நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி.கேசவமேனன், இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா அவர்களும்,கோவை அய்யாமுத்து அவர்களும், எம்.வி.நாயுடு அவர்களும் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ.வே.ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது.