சேரவமிசத்தோர்

bookmark

செந்தமிழ்வேந்தர் மூவருள்ளே, செங்குட்டுவன் பிறந்த சேரவமிசத்தின் ஆதியுற்பத்தி எதனிலிருந்து தொடங்கியது என்பதை அறிதல் இப்போது அரிதாகும். சோழர் சூரிய வமிசத்தவராகவும்* பாண்டியர் சந்திரவமிசத்தவராகவும்† பண்டைநூல்களிற் கூறப்பட்டிருத்தல்போல, சேரவரசர் இன்னமரபினரென்பதை நூல்கள் தெளிவு படுத்தினவல்ல. பிற்காலத்தோர் இவ்வேந்தரை அக்கினிகுலத்தவராக வழங்கினரேனும்,அக்கொள்கைக்குப் பழைய தமிழாதாரங் கிடையாதிருத்தல் வியப்பாயுள்ளது.‡ ஆயினும், இவரை வானவர் என்ற பெயராற் பண்டை நூல்களும் நிகண்டுகளும் குறிக்கின்றன. இதனால், இவ்வமிசம் ஆதியில் தெய்வ சம்பந்தம் பெற்றதென்ற மட்டில் தெளிவாகும்.§ சோழபாண்டியர் வமிசங்களின்ன என்பதைக் குறித்துப்போந்த பண்டை நூல்கள், சேரவமிசத்தின்மூலத்தைமட்டும் அறியாதொழிந்ததை நோக்குமிடத்து, அம்மரபு ஏனையவற்றினும் புராதனமான தென்றே புலப்படுகின்றது.
----------
*மணிமேகலை. பதிகம்.9. †சிலப்பதிகாரம்.11.23.
‡சோழபாண்டியரை, சந்திரவமிசத்து யயாதிவழியிலுதித்த ஒரு கிளையினராக ஹரிவம்சம் கூறுமென்பர். ஆனால் இதற்குப் பண்டைத் தமிழாதாரம் காணப்பட-வில்லை.
§வானவர் (Celestials) என்றபெயர் சீனர்க்கு இன்றும் வழங்கி வருதலால், சேரர் ஆதியில் சீனதேசத்தினின்று வந்தவராக ஸ்ரீ.வி. கனகசபைப் பிள்ளையவர்கள் கருதினர். (The Tamils 1800-yearsago.)

இக்கொள்கையை வலியுறுத்தும் மற்றொரு குறிப்புமுண்டு. அஃதாவது, வழக்கிலுள்ள "சேர சோழ பாண்டியர்" என்னுந்தொடரில் சேரர் முற்படக் கூறப்படுதலேயாம். இங்ஙனங் கூறுவது, உலகவழக்கின் மட்டுமன்றிச் செய்யுள் வழக்கிலும் அடிப்பட்ட-தொன்றாகும். புறநானூறு தொகுத்த புலவர் மூவேந்தருட் சேரரைப்பற்றிய பாடல்களை முதலிலும், ஏனையிருவர் பாடல்களைப் பின்னரும் வைத்து முறைப்படுத்திருத்தலும், சிறுபாணாற்றுப் படையுள்ளும் இங்ஙனமே குட்டுவன் (சேரன்), செழியன், செம்பியன் என்னுமுறை கூறப்படுதலும்* இங்கு ஆராயத்தக்கன. "போந்தை வேம்பே யாரென வரூஉ - மாபெருந் தானையர்"† என, இச்சேரர்மாலையினையே முதற்கண் ஓதுவாராயினர் தொல்காப்பியரும். மேற்காட்டியவற்றுள், சேர பாண்டிய சோழர் என்னும் முறைவைப்புக் காணப்படினும், சேரரை முன்னோரெல்லாம் முதற்கண் வைத்துக் கூறுவதில் ஒத்திருத்தல் குறிப்பிடற்பாலதாம்.
----
* அடி-49,65,82. †தொல்காப்பியம். பொருளதி.புறத்.5

இனி, இச்சேரரது நாடுமூரும் புராதன வடநூல்களினும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆதிகாவியமாகிய வான்மீகராமாயணத்தே, சீதா பிராட்டியை வானரவீரர் தேடிவரும்படி, சுக்ரீவன் குறிப்பிட்ட இடங்களுள், கேரள நாடும்,முரசீபத்தனமும் கூறப்படுகின்றன. இவற்றுள், முரசீபத்தன மென்பது‡ மேல்கடற்கரையிலுள்ள முசிரி என்னும் பட்டினமாகக் கருதப்படுகின்றது.
---------
‡ கிஷ்கிந்தாகாண்டம் 43-ம் சர்க்கம்.12-ம் சுலோகம்.

இது, முற்காலத்தே சுள்ளியென்னும் பேரியாறு கடலுடன் கலக்குமிடத்து விளங்கிய பெருந் துறைமுகமாகவும், சேரருடைய தலைநகரங்களுள் ஒன்றாகவும் இருந்ததென்றும், மேனாட்டு யவனரது மரக்கலங்கள் மிளகு முதலிய பண்டங்களை ஏற்றிச்செல்வதற்கு இதுவே அக்காலத்தில் ஏற்ற நகராயி யிருந்ததென்றும் தமிழ்நூல்களாலும் தாலமி முதலிய பழைய யவனாசிரியர் குறிப்புகளாலுந் தெளிவாகின்றன.* ஆகவே சேரநாட்டையும்,அதன் முக்கிய நகரமொன்றையும் வான்மீகிமுனிவருங் குறிப்பிட்டமை காண்க. இனி, மற்றொரு புராதன இதிகாசமாகிய மஹாபாரதத்தும் சேரர் செய்திகளை நாம் காணலாம். பாரதப்போரில், பாண்டவர் பக்கத்தினின்று சேரர் துணைபுரிந்தனரெனப் பொதுவாக அவ்விதிகாசத்தால் அறியப்படினும், உதியஞ்சேரல் என்பான் அப்பெரும்போர் முடியுங்காறும் பாண்டவ சேனைக்கு உணவளித்தவ-னென்று தமிழ்நூல்களிற் சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இதனைச் தலைச்சங்கப் புலவராகக் கருதப்படும் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர்.

"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்." **
என அவ்வரசனை நேரிற் பாடுதலால் அறிக.
-----------
* அகநானூறு.149. இதனை மரீசிபத்தனம் என்பர், வமிகிரர் பிரஹத்ஸம்ஹிதை
** புறநானூறு.2.

இச்செய்தியையே இளங்கோவடிகள்--
"ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த - சேரன்"
--- சிலப்பதிகார வாழ்த்துக்காதை. ஊசல் வரி.
எனவும், மாமூலனார் என்ற புலவர்—

"மறப்படைக் குதிரை மாறா மைந்திற்
றுறக்கமெய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை" (அகநானூறு.233)
எனவும் கூறுவாராயினர். இனிச் சாஸனவழியே நோக்குமிடத்தும், இச்சேரவமிசத்தின் பழமை தெளியப்படும். இற்றைக்கு 2150- வருஷங்கட்குமுன் விளங்கியவனும் மௌரிய சக்கரவர்த்தியுமாகிய அசோகன் காலத்தே இவ்வமிசத்தவர் கேரளபுத்திரர் என வழங்கப்பெற்றுத் தென்னாட்டில் பிரபலம் பெற்றிருந்த செய்தி அவன் சாஸனத்தால் நன்கறிந்தது. † (†V.A. Smith"s Early History of India. p.173)இச்சக்கரவர்த்தியின் குடைக்கீழ் இப்பரதகண்டத்தின் பெரும்பாகம் அடங்கியிருந்த காலத்தும், தமிழ்நாடு தனியே சுதந்தரம் பெற்றிருந்ததெனின், சேரர் முதலிய பழைய தமிழரசரின் பெருமை இத்தகைத்தென்பது கூறவும் வேண்டுமோ?

இனி, இவற்றை விடுத்துச் சங்கச்செய்யுள்களிற் கூறப்பட்ட சேரவரசரை நோக்குவோம். பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய நூல்களிலே சேரவரசர் பலரைக் காணலாம்.இவற்றுட் பதிற்றுப்பத்து முழுமையும் சேரவமிசத்தவரைப் பற்றியதென்பது முன்னரே கூறப்பட்டது. இதுவரை காணப்படாத இதன் முதலும் இறுதியுமாகிய பகுதிகள் நீங்க ஏனையெட்டுப் பத்துக்கள் மஹாமஹோபாத்தியாய: ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்களால் நன்கு ஆராயப்பெற்று நமக்குக் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனது அருமைபெருமைகளைக் கூறுவதாய், ஓரொரு புலவராற் பாடப்பெற்றதாம். இப்பத்துக்கள் ஒவ்வொன்றன் முடிவிலும் பதிகங்களும் வாக்கியங்களும் இந்நூலைத் தொகுத்த புலவரால் அமைக்கப்பட்டுள்ளன. தொகுத்த புலவர் இன்னாரென்று தெரியவில்லையேனும் பழமையுடையவராகவே தோற்றுகின்றார். இவர் கூற்றாகவுள்ள பதிகங்களும் வாக்கியங்களும் அவ்வச்சேரனைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிவிப்பதோடு, பாடினார் பெயர்முதலிய வரலாறுகளையும்,அப்புலவர் பெற்ற பரிசில்களையும், பாடல்பெற்ற அரசனது ஆட்சிக்காலங்களையும் நன்கு விளக்குவன. இந்நூலிற்கண்ட விஷயங்களால்,செங்குட்டுவனுள்ளாகச் சேரர் எண்மர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரியலாம். அவர்களை அடியில் வருமாறு காண்க.
(1) இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன்
(2) பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
(3) களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்.
(4) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
(5) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
(6) செல்வக் கடுங்கோ வாழியாதன்.
(7) பெருஞ்சேர லிரும்பொறை
(8) இளஞ்சேர லிரும்பொறை
-----------------------------------------------------------

சேரன் செங்குட்டுவன்
தந்தையும் அவன் மாற்றாந்தாய்ச் சகோதரரும்.

மேற்கூறிய சேரர்கட்கும் செங்குட்டுவனுக்கு முள்ள தொடர்பை இனி ஆராய்வோம். செங்குட்டுவனைப் பற்றிய ஐந்தாம் பத்துப்* பதிகத்துள், அவன், "வடவருட்கும் வான்றோய் நல்லிசைக் - குடவர் கோமான் நெடுஞ் சேரலாதனுக்கு" மகன் என்று கூறப்படுகின்றான். இதனால் இரண்டாம்பத்திற் புகழப்படும் இமயவரம்பன் – நெடுஞ்சேரலாதனே நம் சேரன் தந்தை என்பது விளங்கும். "ஆரியர் துவன்றிய பேரிசை யிமயந் - தென்னங் குமரியொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே" † என இவனது வடதிசை வெற்றியை அவ்விரண்டாம்பத்தே கூறுதல் காண்க. செங்குட்டுவன் உடன்பிறந்தவரான இளங்கோவடிகள், இமயம் வரை வெற்றிப்புகழ் பரப்பிய தம் தந்தை செயலை, "குமரியொடு வடவிமயத் – தொரு மொழிவைத்- துலகாண்ட சேரலாதற்கு" எனக் கூறுதலும் இங்கு அறியத் தக்கது.
---------
* இங்ஙனங் குறிக்குமிடமெல்லாம், பதிற்றுப் பத்தினையே கொள்க.
†பதிற்றுப். 1.

இந்நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரலென்ற வேந்தனுக்கு வெளியன் வேண்மான்‡ மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவனது அரிய செயல்களாவன:--இமயம்வரை படையெடுத்துச் சென்று அம்மலைமேல் தன் இலாஞ்சனையாகிய வில்லைப் பொறித்தது; தமிழக முழுமையுந் தன் செங்கோலின் கீழ் வைத்தாண்டது; தன்னுடன் பொருத ஆரியவரசரை வென்றுஅவரை வணங்கச் செய்தது; யவன அரசரைப் போரிற்பிடித்து,அக்காலவழக்கின்படி, நெய்யை அவர்தலையிற்பெய்து கையைப் பின்கட்டாககக் கட்டி, அவரிடத்தினின்று விலையுயர்ந்த அணிகளையும்
வயிரங்களையும் தண்டமாகப்பெற்று, அவற்றைத் தன் தலை ந‌கராகிய வஞ்சியிலுள்ளார்க்கு உதவியது; கடலிடையே தீவொன்றில் வசித்த தன் பகைவர் மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவன்மரமான கடம்பை வெட்டியெறிந்து, அப்பகைவரைப் போர்தொலைத்தது முதலியனவாம்*.
-----
‡"வீரைவேண்மான் வெளியன் தித்தன்" எனப்படுமவன் இவன் போலும். (தொல். பொருளதி. 114 உரை)
* பதிற்றுப்பத்து 2-ம் பதிகம்

இவற்றுள், இறுதியிற் கண்ட சேரலாதன்பகைவர், கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு, மைசூர்தேசத்தின் மேல்பாலை ஆண்ட கதம்ப வேந்தராகக் கருதப்படுகின்றனர். (Mysore and Coog from the Inscriptions. 21. இக்கடம் பெறிந்த அரிய செயலைச் செங்குட்டுவன் காலத்தவரான மாமூலனார் என்ற புலவரும்,
"வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம். (அகநானூறு 127)
எனக் கூறுதல்காண்க. இச்சேரலாதனை 2-ம் பத்தாற்பாடிய அந்தணரான குமட்டூர்க் கண்ணனார், இவனால் உம்பற்காட்டில் ஐந்நூறூர் பிரமதாயமும் (அந்தணர்க்கு இறையிலியாக விடப்படுவது.) தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றனர். இவ்வேந்தன் 58-வருஷம் வீற்றிருந்தான்.(பதிற்றுப்பத்தின் 2-ம் பதிகத்து வாக்கியம்.) இனிச் சேரலாதர் இருவராகக்கொண்டு, இமயவரம்பனும் செங்குட்டுவன் தந்தையும் வேறுவேறாவர் என்று கருதற்குச் சிறந்த சான்றொன்றும் காணப்பட்டிலது.*

இந் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாக விளங்கியவன், பல்யானைச் செல்கழு குட்டுவன் என்பவன்; எனவே, செங்குட்டுவனுக்கு இவன் சிறியதந்தை என்பது தானே விளங்கும். இச்செல்கழு குட்டுவனை 3-ம்பத்தாற்பாடிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளின்படி, இவன் பத்துப் பெருவேள்விகளை நடப்பிக்க, முடிவில் அப் பார்ப்பனப்புலவரும் அவர் மனைவியுஞ் சுவர்க்கம்புக்கனர் எனப்படுகின்றது; இங்ஙனம் சுவர்க்கம்புக்க வரலாறு மலைநாட்டில் இன்றுங் கன்னபரம்
பரையில் வழங்குவதென்பர்.† இவ்வேந்தன் வீரனும் ஞானியுமாக இருபத்தையாண்டு வீற்றிருந்தான்..‡

இனி, இமயவரம்பனுக்கு மனைவியர் இருவராவர்; இவருள் ஒருத்தி சோழன் - மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பாள். இந் நற்சோணையிடம் பிறந்த மக்களே, செங்குட்டுவனும் இளங்கோவடிகளும்; "நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்"§ "சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணையீன்ற மக்களிருவருள்"* எனப்படுதல் காண்க.
-------
*செங்குட்டுவனை அவன் சகோதரர் - "மாநீர் வேலிக் கடம்பறுத்திமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்" என்று கூறுதலாலும் (சிலப். காட்சிக். 1-3) அங்ஙனங் கடம்பறுத்த இமயவரம்பன் மகனே நம் சேரன் என்பது உணரப்படும்.
† பதிற்றுப்பத்துப் பதிப்பில் மஹாமஹோபாத்தியாயர் ஐயரவர்கள் எழுதிய நூலாசிரியர்வரலாறு பார்க்க. சிலப்.23, 63-64; பழ மொழி.316
‡ பதிற்றுப்.3-ம் பதிகம்.
§ 5-ம் பதிகம்.

இனி, நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவி, வேளாவிக் கோமானான பதுமன் என்பவன் மகள். இவளிடம் அச் சேரனுக்குப் பிறந்த மக்கள், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர்.† இவருள், முன்னவன், முடிசூடுஞ் சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியுங்கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமைபற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியுஞ்செய்து புனைந்து கொண்டமையின் "களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்" என்னும் பெயர் பெற்றான்.‡ இச்சேரனுக்குப் பெரும்பகைவனாகி அவனாட்டைக் கவர்ந்தவன், கடம்பின் பெருவாயில் என்ற ஊர்க்குரிய நன்னன் என்பவன். இவனை, மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த பெரும்போரிற் கொன்று, தானிழந்த நாட்டை இவ்வேந்தன் திரும்பப்பெற்றான் என்று கல்லாடனார் கூறுவர். இங்ஙனம் இவன்பெற்றது பூழிநாடென்பது, "பூழிநாட்டைப் படையெடுத்துத்தழீஇ" என இவன் பதிகங் கூறுதலினின்று புலப்படுகின்றது
----------------
* சிலப்பதிகாரப் பதிகம், அடியார்க்கு நல்லாருரை.
† 4, 6-ம் பத்துப் பதிகங்கள்.
‡ பதிற்றுப்பத்து. 38-உரை
"குடாஅது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படுகொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், இழந்தநாடு தந்தன்ன" (அகநானூறு. 199)
----

இவனை 4-ம் பத்தாற்பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் அந்தணர். இவர் இவனைப்பாடி, 40-நூறாயிரங் காணமும்* அவனாட்டிற் பாகமும் பரிசுபெற்றார். இச்சேரல் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான்.†

இந்நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரலாதன் செங்கோற்பெருமையாற் சிறந்தவன். இவனது வீரச்செயல்களிலே, தண்டாரணியத்திலுள்ளரால்‡ கவரப்பட்ட பசுநிரைகளை மீட்டுத் தொண்டியிற் கொணர்ந்துசேர்ப்பித்ததே முக்கியமானது. இதுபற்றியே "ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்" எனப்பட்டான். இவ்வேந்தன் தன்னை 6-ம் பத்தாற்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்புலவர்க்கு, அணிகலன் செய்துகொள்வதற்காக ஒன்பது காப்§பொன்னும் நூறாயிரங் காணமுங்கொடுத்து அவரைத் தன் ஆஸ்தானத்தில் வைத்துக்கொண்டு அபிமானித்தனன். இச்சேரலாதன் முப்பத்தெட்டாண்டு வீற்றிருந்தவன். $

இனி, பதிற்றுப்பத்துத் தொகுத்த புலவர் நார்முடிச் சேரலைப்பற்றிய பகுதியை நான்காவதாகவும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது பகுதியை ஆறாவதாகவும் வைத்து, இடையிற் செங்குட்டுவனைப் பற்றியதை அமைத்திருக்கின்றார்.
-------
* இது, சேரரின் பழைய நாணயமாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் தெரிகிறது. மலைநாட்டில் 3-கழஞ்சு அல்லது 1 1/2 பணம், காணம் என இப்போது வழங்குகின்றது. (Dr.Gundert"s Malayalam Dictionary)
† 4-ம் பத்துப்பதிகம்.
‡தண்டாரணியம் - ஆரிய நாட்டிலுள்ளதோர் நாடு. இஃது இப்போது பம்பாய் மாகாணத்தைச் சார்ந்ததாகும். (Dr. Bhandarkar"s History of Dekkan. p. 136)
§ கா - ஒரு பழைய நிறை.
$ 6-பத்துப் பதிகம்.

இதனால், நார்முடிச்சேரல் செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாகவும், அவன் தம்பி சிறிது பிற்பட்டவனாகவுங்கருத இடமுண்டாகின்றது. காலமுறையில் வைத்தே, பதிற்றுப்பத்துத் தொகுக்கப்பட்டிருத்தலை அதனுட்கண்ட பதிகங்களாலும் வாக்கியங்களாலும் உய்த்துணரலாகும்.

சேரன் செங்குட்டுவனது 5-ம் பதிகத்தால் அவன் தாய்ப்பாட்டனாகத் தெரியும் மணக்கிள்ளி, உறையூரிலிருந்தாட்சி புரிந்த சோழனாவன். செங்குட்டுவன் மாற்றாந்தாயைப் பெற்றவனாக 4, 6-ம் பதிகங்கள் கூறும் வேளாவிக்கோமான் பதுமன்என்பவன் பொதினிமலைக்குரிய* ஆவியர்குலத்தோன்றல். இவ்வேளாவியின் பெயரால் வஞ்சியின்புறத்தே ஒரு மாளிகை அமைக்கப்பட்டிருந்ததென்று தெரிகின்றது.†
--------------
* பொதினி என்பது பழனியின் பழைய பெயர். இவ்வாவியர் இதனை-யாண்டமைபற்றியே, இஃது ஆவிநன்குடி என வழங்கப்பெற்றது. இவ்வாவியர்குடியில் உதித்தவருள், வள்ளலான பெரும்பேகனும் ஒருவன். (யாமெழுதிய வேளிர் வரலாறு பார்க்க)
† சிலப்பதிகாரம். 28: 196-8; புறநானூறு. 13.
----------------
சேரரின் மற்றொரு கிளையினர்
இனி, பதிற்றுப்பத்தின் இறுதிமூன்று பத்துக்களாற் புகழப்பட்ட அரசர், சேரமரபின் மற்றொரு கிளையினராகத் தோற்றுகின்றனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் இம்மரபின் தலைவன் என்பதும், இவன் மகன் செல்வக் கடுங்கோ வாழியாதனென்பதும் 6-ம்பத்துப்பதிகத்தால் அறியப்படும். இவ்வந்துவஞ்சேரல், முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி என்ற சோழனுக்குப் பகைவன்.(புறநானூறு 13) இச் சேரன் மகனான செல்வக்கடுங்கோ, பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர்பெற்றவன்; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன் ("மாயவண்ணனை மனனுறப்பெற்று" என இவன்பதிகங் கூறுதல் காண்க.)

கபிலர் என்னும் புலவர் பெருமான் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள் - பாரி உயிர்நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச் செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம்பத்தை இச்சேரன்முன் பாடினர். (இவ்வேழாம்பத்தின் முதற்பாட்டில், இச்செய்தியைக் கபிலரே கூறுதல் காணலாம்.) அவர் பாடலைக்கேட்ட செல்வக்கடுங்கோ அவ்வந்தணப் பெரியார்க்குச் சிறுபுறமாக (சிறுபுறம்-சிறுகொடை) நூறாயிரங் காணம் அளித்ததோடு,நன்றா என்னுங்குன்றில் தானும் அவரும் ஏறிநின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாங்காட்டி அப்புலவர்க்-களித்தான். (7-ம் பத்துப்பதிக வாக்கியம்.) இவ்வருங்கொடையை "நனவிற்பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற ஊரினும் பலவே" எனப் பிற்காலத்தவரும் புகழ்தல் காண்க.(பதிற்றுப். 85) இவன் மனைவி (நெடுஞ்சேரலாதற்கு மகட்கொடுத்த) வேளாவிக் கோமானுடைய மற்றொரு மகளாவள்.(8-ம் பதிகம்) ஆகவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோவும் சகலமுறையினரென்பது விளங்கும். இவ்வேந்தர்பிரான் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தவன் (7-ம் பதிகவிறுதி). இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்திற் காலஞ்சென்றவனென்று தெரிகின்றது.(புறநானூறு 387)

இச் செல்வக்கடுங்கோவுக்குப் பிறந்த வீரமகன் பெருஞ்சேரலிரும்பொறை என்பான். இவன் அதியமானது தகடூர் மேற்படையெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அவ்வதியமானையும் அழித்தனன். இப் போர்ச்செயலே தகடூர் யாத்திரை(இதனுட் சில பாடல்கள், தொல்காப்பியவுரை, புறத்திரட்டு முதலியவற்றிற் காணப்படுவதன்றி, நூன்முழுதும் இதுவரை வெளிவரவில்லை.) என்னும் பண்டைநூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றிபற்றித் "தகடூரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். இப்பெருஞ்சேரலை 8-ம்பத்தாற் புகழ்ந்தவர் அரிசில் கிழார் என்ற புலவர்பெருமான்.இவர் பாடல்களைக்கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானுந்தன் மனைவியும் வெளியே வந்துநின்று "தன் கோயிலிலுள்ளனவெல்லாம் கொள்க’ என்று ஒன்பதுநூறாயிரங் காணத்தோடு தன் அரசுக் கட்டிலையும் (சிங்காதனம்.) புலவர்க்குக் கொடுப்ப, அவர் "யானிரப்ப நீ யாள்க’ என்று அவற்றைத் திரும்பக்கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப் பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான் (8-ம்பத்துப் பதிகம்.) இப்பெருஞ்சேரற்கு மனைவியாகிய அந்துவஞ்செள்ளை வயிற்றில் உதித்தவன் இளஞ்சேரலிரும்பொறை என்பான். இவன், தன்னை 9-ம்பத்தாற்பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு "மருளில்லார்க்கு மருளக் கொடுக்க" என்று உவகையின் முப்பத்தீராயிரங் காணங்கொடுத்து, அவரறியாமை ஊருமனையும் வளமிகப்படைத்து,ஏருமின்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னீராயிரம் பாற்படவகுத்துக், காப்புமறந்தான் விட்டான்" என்று கூறப்பட்டுளது (9-ம்பத்துப் பதிகம்.)

இங்ஙனமாகப் புலமையைக் கௌரவித்த அரசர் முற்காலத்தே வேறெவருங் காணப்பட்டிலர்.[** பெருங்குன்றூர்க்கிழார் இவ்வேந்தனைப் பாடியனவாகப் புறநானூற்றிற் காணப்படும் 210, 211-ம் பாடல்களால், அப்புலவரை நெடுங்காலங் காக்கும்படிவைத்துப் பின் ஒன்றுங்கொடாமலே இவ்வேந்தன் அனுப்ப, அதுபற்றி மனமுடைந்துசென்றனர் புலவர் என்பது தெரிகின்றது. இதனால், பெருங்குன்றூர் கிழாரது நல்வாழ்வுக்கு வேண்டியவனைத்தையும் அவரூரில் அவரறியாமலே அமைத்து வைத்துப் பின்னர் வெறுங்கையோடு அவரைவிடுத்தனன் இப்பெருஞ்சேரல் என்பது உய்த்துணரப்படுகின்றது. இச்சரிதம்போலப் பிற்காலத்து வழங்குவது சத்திமுற்றப் புலவர் என்பவர் வரலாறொன்றேயாம்.)] இவ்விளஞ்சேரல் பதினாறாண்டு வீற்றிருந்தவன்.

இனி, இவ்விளஞ் சேரலின் முன்னோருள், மாந்தரன்("அறன்வாழ்த்த நற்சாண்ட, விறன்மாந்தரன் விறன்மருக’ எனக்காண்க. (பதிற். 90.))என்பவனும், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்பவனும் பிரசித்தர்களாகக் காணப்படுகின்றனர்.இவருள் முன்னவனே "மாந்தரம் பொறையன் கடுங்கோ’எனப் பரணராலும் பாடப்பட்டவனாதல் வேண்டும்.(அகம். 142.)மற்றொருவனாகிய கோப்பெருஞ்சேர லிரும்பொறையை நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் கண்டதும் அவர் தம் பழைய நல்லுடம்பு பெற்றனர் எனப்படுகின்றது.(புறம். 5)மேற்குறித்த மாந்தரனின் வேறாக, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்பவனொருவன் புலவனும் வள்ளலும் போர்வீரனுமாக நூல்களால் அறியப்படுகின்றான். இவன் கபிலர் காலத்திற்குச் சிறிது பிற்பட்டிருந்தவன்.(புறம். 53.) ஐங்குறுநூறு இவனால் தொகுப்பிக்கப்பெற்ற தென்பர். இவன் மேற்குறித்த இளஞ்சேரலிரும்பொறைக்குத் தம்பி அல்லது மகன் போன்ற சமீபித்த உறவினன் போலும்.

இவர்களன்றிப் பிற்காலத்தில் கணைக்காலிரும்பொறை (புறம் 74. களவழி நாற்பது என்னுஞ் சிறுநூல், இவ் விரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நிகழ்ந்த கழுமலப்போரைப்பற்றிப் பொய்கையாராற் பாடப்பெற்றது.) என்பவனொருவனும் இவர் வழியில் ஆண்டனன். இவரையெல்லாம் இரும்பொறை மரபினர் என்று நாம் கூறுதல் தகும். செங்குட்டுவன், இவ்விரும்பொறைமரபின் முன்னோருள் ஒருவனாகவும் கூறப்படுதலால்,+ ("கடலிருப்ப வேலிட்டும்" என்பது செங்குட்டுவன் செய்தியாகும். (பதிற். 90)) இம்மரபினரும் நம் சேரன்மரபினரும் நெருங்கிய தாயத்தார் என்பது தெளிவாகின்றது.
-------------
இரும்பொறை மரபினர்
1. மாந்தரம் பொறையன் கடுங்கோ
2. கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை.
3. அந்துவஞ் சேர லிரும்பொறை.
4. செல்வக் கடுங்கோ வாழியாதன் X பதுமன்றேவி.
5. தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை X அந்துவஞ் செள்ளை.
6. இளஞ்சேர லிரும்பொறை.
7. யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.
8. கணைக்கா லிரும்பொறை.

மேற்குறித்தவர் அல்லாத வேறுசில சேரவரசரும் புறநானூறு முதலிய சங்கச்-செய்யுள்களிற் காணப்படுகின்றாராயினும், அவர்கட்கும் செங்குட்டுவனுக்குமுள்ள தொடர்பு விளங்கவில்லை.

இனி, இமயவரம்பன் பெருந்தேவியரிடம் பிறந்த மக்களும், இரும்பொறைமரபினரும் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் ஆட்சிபுரிந்தவர்கள். இம்முறையில், கருவூராகிய வஞ்சிமாநகரம் செங்குட்டுவனுக்குத் தலைமைநகராக விளங்க, மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும்பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாகவிருந்தன எனத் தெரிகின்றது. மாந்தையுந் தொண்டியும் சேரதேசத்தின் முக்கிய நகரங்கள் என்பது, "சேரலாதன் ... நன்னகர் மாந்தை முற்றத்து" (அகம் 127) "குட்டுவன் மாந்தை"(தொல். பொரு. 107 உரை.) எனவும்,"குட்டுவன் தொண்டி" எனவும் நூல்கள் கூறுதலால் அறியலாம். இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையில் அமைந்தவை. (கடல்கெழு மாந்தை" (தொல். பொரு. 150 உரை) "கானலந்தொண்டி" (புறம் 48) எனக் காண்க இவற்றுள், தொண்டி என்பது முற்காலத்தே பலதேச மரக்கலங்கள் வந்துதங்கும் பெருந்துறைமுகமாக விளங்கிய தென்பது, முன்னூல்களாலும்,தாலமி(Ptolemy)முதலிய யவனாசிரியது குறிப்புக்களாலும் அறியப்படுகின்றது. இப்போது, அகலப்புழையையடுத்துள்ள தொண்டிப்பாயில் என்னுஞ் சிற்றூரைப் பழைய தொண்டியாகக் கருதுவர்.)

மேற்கூறிப்போந்த சேரமரபினரெல்லாம் அறிவுதிருவாற்றல்களால் தங்காலத்தே ஒப்புயர்வற்று விளங்கியவரென்பதும் செந்தமிழ்வளர்ச்சி செய்ததில் இன்னோரே அக்காலத்துச் சிறந்து நின்றவரென்பதும் நன்கு வெளியாதல் காண்க.

செங்குட்டுவன் சகோதரர்
செங்குட்டுவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்னுஞ் சோழனுடன் பெரும்போர் புரிந்தபோது, அவ்விருவருமே போர்க்களத்தில் ஒருங்கிறந்தனர் என்பது, அவர்களிறந்துகிடந்த நிலையை நேரிற்கண்டு கழாத்தலையாரும் பரணரும் உருகிப்பாடிய பாடல்களால் தெரியவருகின்றது. (புறநானூறு 62, 63.)இந் நெடுஞ்சேரலாதன் 58-ஆண்டு வீற்றிருந்தவன். இவன் பேராற்றலுடன் விளங்கியதற்கேற்ப,இவன் மகன் செங்குட்டுவனும் பெருவீரனாய் அவனது சிங்காதனத்துக்கு உரியவனாயினான். நெடுஞ்சேரலாதன் சிவபிரான் திருவருளை நோற்றுச் செங்குட்டுவனைப் பெற்றவனென்பது உய்த்துணரப்-படுகின்றது.(சிலப்பதிகாரம் 26; 98-99. 30; 141-142) இவன் அரசாட்சிபெற்றதில் விசேடச் செய்தியொன்றுஞ் சொல்லப்பட்டுள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் செங்குட்டுவனுடன் இளங்கோ ஒருவனும் பிறந்திருந்தனன். இவ்விளங்கோ,பேரறிவும் உத்தமகுணங்களும் வாய்ந்தவன். ஒருநாள் பேரத்தாணியில் மன்னர்கள் புடைசூழ, நெடுஞ்சேரலாதன் தன் மக்களிருவருடனும் வீற்றிருந்தபோது, நிகழ்வது கூறவல்ல நிமித்திகனொருவன் அம் மண்டபத்தை அடைந்து,அரசனையும், அவன் மக்களையும் அடிமுதன் முடிவரை நோக்கி- "வேந்தர் வேந்தே! இனி நீ விண்ணுலகு செல்லுங்காலம் நெருங்கியது; நீ தாங்கியுள்ள செங்கோலை நின் மக்களிருவருள் இளையோனே வகித்தற்குரியனாவன்" என்று பலருமறியக் கூறினான்.

இதுகேட்ட மூத்தவனான செங்குட்டுவன் மனமுளைந்து நிற்க, அஃதறிந்த இளங்கோ, அந்நிமித்திகன் முறைமைகெடச் சொன்னதற்காக அவனைவெகுண்டு தந் தமையன்கொண்ட மனக்கவலைநீங்கும்படி அவ்வத்தாணிக்கண்ணே அரசாளுரிமையை முனிந்து துறவுபூண்டு,வீட்டுலகத்தை ஆளற்குரிய பெருவேந்தராய் விளங்கினர்-என்பதாம். கருவிலே திருவுடையராயிருந்தும் இளமையில் தாம் துறவுபூணும்படி நேர்ந்ததைத் தம் அழகிய வாக்கால் இவ் விளங்கோவே கூறியிருத்தல் அறிந்து மகிழற்பாலது. செங்குட்டுவனுடன் பத்தினிக்கடவுளை வழிபட்டுத் திரும்பும்போது, தேவந்தியின்மேல் அக்கடவுள் ஆவேசித்துத் தம்மைநோக்கிக் கூறியதாக இவ்வடிகள் கூறுவதாவது:-
"வேள்விச் சாலையில் வேந்தன் பெயர்ந்தபின்
யானுஞ் சென்றேன், என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேற் றிகழ்ந்து தோன்றி
"வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய்! நின்னை
அரசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று
உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்
கொங்கவிழ் நழுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்து"என
என்றிற முரைத்தஇமையோ ரிளங்கொடி"(சிலப்பதிகாரம் 30: 170-183.) என்பது.
இவ்வரலாற்றையே அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப் பதிகவுரையிற் சிறிது விரித்துக்கூறினர்.

இவற்றால், செங்குட்டுவன் பட்டமெய்துவதற்கு முன்பு நிகழ்ந்த இளங்கோவின் துறவுவரலாறு வெளியாம். இங்ஙனம் துறவு பூண்ட பின், இளங்கோவடிகள் என வழங்கப்பெற்று, வஞ்சிமாநகரின் கீழ்பாலுள்ள "குணவாயிற் கோட்டம்" என்றவிடத்தில் வசித்து வந்தனர் ("குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த-குடக்கோச் சேரல்இளங்கோவடிகட்கு" என்பது பதிகம்.) இவர், பெருந் துறவியாக இருந்தது மட்டுமன்றி, அக்காலத்திருந்த உத்தம கவிகளுள் ஒருவராகவும் விளங்கினர். தமிழைம்பெருங் காவியங்களுள் ஒன்றாகச் சிறப்பிக்கப்படும் சிலப்பதிகாரம் இவ்வடிகள் இயற்றியதென்பதையும், அதன் சொற்பொருள்வளங்களையும் அறிந்து வியவாத அறிஞருமுளரோ? இந்நூலை அடிகள் பாடுதற்குக் கருவியாக நின்ற பெரும்புலவர், மதுரைக்கூலவாணிகன் சாத்தனார்(இவர் வரலாற்றை "இருபெரும் புலவர்" என்னும் இந்நூற்பகுதியுட் காண்க.) என்பவர். இப்புலவரைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அடிகள் தம் நூலை அரங்கேற்றினர்.("உரைசா லடிக ளருள மதுரைக்-கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்." (சிலப்-பதி.88-9)) அவ்வச் சமயநிலைகளையும், தமிழ்மூவேந்தர் பெருமைகளையும் நடுநிலைபிறழாது கூறிச்செல்வதிலும் இயற்கைச் சிறப்புக்களை எடுத்துமொழிவதிலும், உலகத்தின் தர்மங்களை உணர்த்துவதிலும் இவ்வடிகட்கிருந்த பேராற்றல் மிகவும் வியக்கற்பாலது. இவ்வடிகள் ஜைநமதத்திற் பற்றுள்ளவராகவே இவரது வாக்கின் போக்கால் உய்த்துணரப் படுமாயினும்,வைதிக சமயத்தவராகக் கருதற்குரிய சான்றுகளுமுள்ளன.

எங்ஙனமாயினும், மதாந்தரங்களில் அபிமானமும் ஆழ்ந்த ஆராய்ச்சியுமிக்கவர் இவ்வடிகள் என்பதில் ஐயமில்லை.மற்றும் இவர் அருமை பெருமைகள் இந்நூலில் உரியவிடங்களிற் கூறியுள்ளோம்.
---------------
செங்குட்டுவன் மனைவிமக்கள் முதலியோர்
சேரன் - செங்குட்டுவனுடைய கோப்பெருந்தேவியாக விளங்கியவள் இளங்கோவேண்மாள் என்பாள். " இளங்கோவேண்மா ளுடனிருந் தருளி" (சிலப்பதிகாரம். 25,5)"வதுவைவேண்மாள் மங்கல மடந்தை"(சிலப்பதிகாரம்28:51) எனச் சிலப்பதிகாரம் குறிப்பது காண்க. இதனால், இப்பெருந்தேவி வேளிர் குலத்தவள் என்பது பெறப்படும். இவளொருத்தியையன்றி வேறு மனைவியரைச் செங்குட்டுவன் மணந்திருந்தவனாகத் தெரியவில்லை. (இளங்கோ வேண்மாள் என்ற பெயரால் இவளை இளைய மனைவியாகக் கருதக்கூடுமேனும், செங்குட்டுவற்கு மூத்தமனைவியொருத்தி இருந்ததாக இளங்கோவடிகள் உரியவிடங்களிலும் உணர்த்தாமையால், அவ்வாறு துணியக்கூடவில்லை. ஒருகால் மூத்தவளிருந்து இறந்தனளாக, அடுத்துமணம் புரியப்பெற்ற இவள் இங்ஙனம் வழங்கப் பெற்றாள்போலும்.) செங்குட்டுவனுக்குக் குட்டுவஞ்சேரல் (குட்டுவஞ்சேரல்-(செங்)குட்டுவனுக்கு மகனாகிய சேரல் எனப்பொருள்படும்.) என்னும் பெயர்பூண்ட மகனொருவனிருந்தனன்.

பரணரென்னும் புலவர் பெருமான் ஐந்தாம் பத்தால் தன்னைப் பாடியதுகேட்டு மகிழ்ந்த செங்குட்டுவன், அவ்வந்தணர்க்குப் பெரும்பொருளோடு, இக்குட்டுவஞ்சேரலையும் பரிசாக அளித்தானென்று அப் பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. இங்ஙனம் "மகனைப் பரிசளித்தான்’ என்பது, பரணரிடங் கற்று வல்லனாம்படி அவனைக் குருகுலவாசஞ் செய்ய நியமித்ததைக் குறிப்பதுபோலும். இக் குட்டுவஞ்சேரல் மேற்குறித்த கோப்பெருந்தேவியிடம் பிறந்தவனாதல் வேண்டும். இம்மகன் பட்டம் பெற்ற பின்னர்,முற்காலமுறைப்படி வேறுபெயரும் இவனுக்கு வழங்கியிருத்தல் கூடும். ஒருகால், சோழன் பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி--இவருடன் நட்புப்பூண்டிருந்த சேரமான் மாவெண்கோ என்பவன்,(புறநானூறு--367.) இக்குட்டுவஞ்சேரலோ என்று கருதுதற்கும் இடமுண்டு.

செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்பவனென்றும், அவ் வம்மானுக்கு மகன் சோழன்-இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் புலப்படுகின்றன. இதற்குற்ற காரணங்களைச்"செங்குட்டுவன் காலத்தரசர்" என்ற அதிகாரத்துள் விளக்கியுள்ளோம்.இவ்வாறு பண்டைநூல்களாற் றெரிந்தவளவிற் செங்குட்டுவன் சுற்றத்தாரைப் பின்னர் வருமாறு தொகுத்துக் காட்டலாம். இவரைப்பற்றிய விவரங்களை ஆங்காங்கு அறிந்துகொள்க.
-------------
[செங்குட்டுவன். ... ... சுற்றத்தார்]
1. தந்தையைப்பெற்ற பாட்டன் -- உதியஞ்சேரல்.
2. தந்தையைப்பெற்ற பாட்டி -- வேண்மாள் நல்லினி.
3. தந்தை -- இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன்.
4. தாய் -- நற்சோணை.
5. இளைய சகோதரர் -- இளங்கோவடிகள்.
6. மனைவி -- இளங்கோவேண்மாள்.
7. மகன் -- குட்டுவஞ்சேரல்.
8. சிறியதந்தை -- பல்யானைச் செல்கெழு குட்டுவன்.
9. தாய்ப்பாட்டன் -- சோழன் மணக்கிள்ளி.
10. அம்மான் -- காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
11. அம்மான் சேய் -- இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
12. மாற்றாந்தாய் -- பதுமன்றேவி.
13. மாற்றாந்தாய் வயிற்றுச் சகோதரர் -- நார்முடிச்சேரல்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.
14. மாற்றாந்தாய்ப் பாட்டன் -- வேளாவிக்கோமான் பதுமன்.
15. தாயத்தார் -- இரும்பொறை மரபினர்.