செங்குட்டுவன் போர்ச்செயல்கள்

நெடுஞ்சேரலாதன் விண்ணுலகஞ் சென்றபோது செங்குட்டுவனுக்கு உத்தேசம் 20-வயது கொள்ளலாம். ஆயின்,55-ஆண்டு செங்குட்டுவன் வீற்றிருந்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுதலால், குறைந்தது 35-வருஷகாலம் இவன் ஆட்சி செய்தவனாதல் வேண்டும். இந்நீடித்த ஆட்சியில் நிகழ்ந்த இவன் செய்திகள் முழுதுந் தெரியக் கூடவில்லை. ஆயினும்,சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும், இவனால் நிகழ்த்தப்பட்ட அருஞ்செயல்கள் சிலவற்றைக் குறித்திருக்கின்றன.அவற்றிற்கண்ட செங்குட்டுவன் வீரச்செயல்களிலே சிறப்புடையவை அடியில் வருவனவாம்.
1. தன் தாயின்பொருட்டுச் சமைத்த படிமத்தைக் கங்கைநீராட்டச் சென்றபோது, ஆங்கெதிர்த்த ஆரியவரசருடன் நடத்திய போர்.
2. கொங்கர் செங்களத்து நடத்திய போர்
3. கடல்வழியே சென்று நடத்திய போர்
4. பழையன் மாறனுடன் நடத்திய போர்
5. ஒன்பது சோழருடன் நடத்திய போர்
என்பன. இப்போர்களிற் சில, இன்னகாரணம்பற்ரி நிகழ்ந்தன என்ற விவரத்தைச் செங்குட்டுவன் சகோதரரே விளக்கின ஆயினும் முன்னூல்களின் குறிப்புக்கொண்டு அடியில்வருமாறு அறிதற்பாலன;
இப்போர்களுள்--
(1) செங்குட்டுவன் தாயான நற்சோணை இறந்தபோது,அவள்பொருட்டுச் சமைத்த பத்தினிக்கல்லை(சககமனஞ்செய்த பத்தினியினுருவம் வரைந்த சிலை; இதனை, மாஸ்திகல் என்பர், கன்னடநாட்டார்.) நீராட்டித் தூய்மை செய்தற்குச் சென்ற கங்காயாத்திரையில், ஆரியவரசர் பலர் திரண்டுவந்து செங்குட்டுவனை எதிர்த்துப் பெரும்போர் விளைத்தனரென்றும், அவரையெல்லாம் அப்பேராற்றங் கரையில் இச்சேரன் தனியனாகப்பொருது வெற்றி கொண்டனனென்றும் தெரிகின்றன. இதனை,
"கங்கைப் பேர்யாற்றுக் கடும்புன னீத்தம்
எங்கோ மகளை யாட்டிய வந்நாள்
ஆரிய மன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலங்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்." (சிலப். 25: 160-64)
என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறிக. செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருநற்கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியும் செங்குட்டுவன் தாயுமாகிய நற்சோணை உடனுயிர்நீத்தனள் என்பது, புறநானூற்றின் 63-ம் பாடலாற் புலப்படுகின்றது.இங்ஙனம் சககமனஞ்செய்த தாயின்பொருட்டுச் செங்குட்டுவன் பத்தினிக்கல் அமைத்தனன் போலும். இங்ஙனமன்றாயின்,தனிமையாக இறக்கும் மகளிர்க்குப் பத்தினிக்கல் எடுத்தல் சிறவாதாகும். இவ்வாறு, தாயின் படிமத்தை நீராட்டச் சென்றபோது, கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரியசெயல் அவனது கன்னிப்போர்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
(2) இனிக் கொங்கர் செங்களத்தே செங்குட்டுவன் ஒரு போர் நடத்தியதாகத் தெரிகிறது. இதனில், சோழபாண்டியருஞ்சேர்ந்து எதிர்த்தனரென்றும், அவரது கொடி படைகளையெல்லாம் கைக்கொண்டு, அப்போரில் யாவரும் புகழத்தக்க பெரிய வெற்றியைச் செங்குட்டுவன் பெற்றனனென்றும் சிலப்பதிகாரங் கூறுகிறது.
"நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தன ராயினு மாங்கவை
திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன." (சிலப்.25: 152-55)
எனக்காண்க. கொடுகூர் என்ற நகரம் இக்கொங்கர் போரிலே செங்குட்டுவனால் அழிபட்டதாகும். "கொடுகூரெறிந்து" என்பது பதிற்றுப்பத்து. கொடுகூர் நாடு என்பதொன்று, இப்போது மைசூரிராஜ்யத்தின் தென்பகுதியாகிய பன்னாடு விஷயத்தின் ஒரு பிரிவாகவும், சேரமானுக்குரிய பூமியாகவும் இருந்ததென்று பழையசாஸனமொன்று(இரவிதத்தனது குமாரலிங்க சாஸனம். இக்கொடுகூர் நாடு சேரனுக்குரியதாயிருந்ததென்பது,மேற்படிஇரவிதத்தன் என்றசிற்றரசன்,சேரன் அநுமதிபெற்றுப் பிராமணனொருவனுக்கு அந்நாட்டிலுள்ள கிராமமொன்றைத் தானஞ்செய்தான் என்பதனால் அறியப்படும்.( Indian Antiquary.Vol.XVIII, 1889.p.367.)) கூறுகிறது. இக் கொடுகூர்நாட்டின் தலைநகரே சேரனால் அழிக்கப்பட்டதாதல் வேண்டும்.
(3). இனிப் பரணரென்ற புலவர் பெருமான் பாடிய ஐந்தாம்பத்தில் மிகுதியாகப் பாராட்டப்படும் செங்குட்டுவன் வீரச்செயல்கள், அவன் கடலில் சைந்நியங்களைச் செலுத்தியதும் பழையனென்பவனை அழித்ததுமாம். இவற்றுள் முதற்செயல், கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகையரசரை, எண்ணிறந்த மரக்கலங்கள்மூலம் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டதைக் குறிக்கின்றது.
"இனியா ருளரோ முன்னு மில்லை
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப்பனிக்கடல் மறுத்திசி னோரே." (45)
" கோடுநரல் பவ்வங் கலங்க வேலிட்
டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய
வெல்புகழ்க்குட்டுவன். " (46)
"கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ." (48)
எனப் பதிற்றுப்பத்தினும்,
"படைநிலா விலங்குங் கடன்மரு டானை
மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பொறாது விலங்குசினஞ்சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய
நீர்மா ணெஃக நிறுத்துச்சென் றழுந்தக்
கூர்மத னழியரோ நெஞ்சே. " (212)
என அகநானூற்றினும் வரும் பரணர் வாக்குக்களால், செய்தற்கரிய கடற்போரொன்று செங்குட்டுவனால் நிகழ்த்தப்பட்டமை தெளியப்படும். இளங்கோவடிகள்,
"நெடங்கட லோட்டி, உடற்றுமேல் வந்த வாரியமன்னரைக்
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய். " (28;119-21)
"மறத்துறை முடித்த வாய்வாட் டானையொடு
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட்டுவன்." (சிலப். இறுதிக்கட்டுரை.)
என, கடலோட்டிய செய்தியோடுசேர்த்து ஆரியரை வெற்றி கொண்டதை இருமுறை இணைத்துக் கூறுதலால், செங்குட்டுவன், தன் தாயின் படிமத்தை நீராட்டுதற்குக் கங்காயாத்திரை செய்தபோது, இங்ஙனம் பகை வென்றவனாகவே தோற்றுகிறது. கடலிற்செய்த இவ்வருஞ்செயல்பற்றியே "சேரமான் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன்" (புறம்-369.) "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்"(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம்) என இவ்வேந்தன் புகழப்படுகின்றான்.இவனது கடற்படையெடுப்பில், தனக்குச் சிறந்த வேலையேற்றிக் கலங்களைச் செலுத்தி, தன்னுள் வாழ்வார்க்கு அரணாயிருந்த கடல்வலியை அழித்தமையால், மேற்குறித்த பெயர்கள் வழங்கலாயின என்க.(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம் 45, 46, உரை காண்க.) இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் இங்ஙனமே கடனடுவிலிருந்த தன் பகைவர் மேற் படையெடுத்துச் சென்று வென்ற செய்தி முன்னரே குறிக்கப்பட்டது.(இந்நூல் வேறு பக்கங்காண்க) இனி,இளங்கோவடிகள்,
"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரீயரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது." (சிலப். 25:156-59)
என்று கூறிய செய்தி, இப்போருடன் தொடர்புடையதோ அன்றித் தனியானதோ தெரிந்திலது.
இதனால், தன் காலத்தரசர் பலர்க்குப் பேரச்சம்விளைத்த பெருவீரனாக விளங்கியவன் செங்குட்டுவன் என்பது பெறப்படும்.
(4) இனிச் செங்குட்டுவனது வெற்றிப்புகழ்க் கேதுவாகிய மற்றொரு போர்,பழையன் என்பானுடன் நிகழ்ந்ததாகும்.பழையன் என்பவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பெருவீரன். இவன் மோகூர் என்னும் ஊருக்குரியவன்; "பழையன் மோகூ ரவையகம்" என்பது மதுரைக்காஞ்சி. இப்பழையனை "மோகூர்" எனவும் வழங்குவர்;"மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்" (பதிற்றுப்பத்து.44)"மோகூர் பணியாமையின்" (அகம். 251) எனக் காண்க. மோரியவரசர் திக்குவிசயஞ் செய்துகொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்பழையன் அவர்க்குப் பணியாமையால்,அவர்க்கும் இவனுக்கும் பொதியமலைப் பக்கத்தே போர் நிகழ்ந்ததென்று தெரிகிறது. செங்குட்டுவன் இப்பழையனுடன் பகைமை பூண்டு போர்புரிந்தது,நெடுந்தூரத்திருந்த தன் நட்பரசனாகிய அறுகை என்பவனுக்கு இப்பழையன் பகைவனாயிருந்தமையால், அந் நண்பனுக்கு உதவி செய்வற்காகவே என்பது,
"நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு."
என்னும் பரணர்வாக்கால் அறியப்படுகிறது. ஈண்டு அறுகையெனப்பட்டவன் மோரியவமிசத்துதித்த அரசன் போலும்.செங்குட்டுவன் நிகழ்த்திய இப்பெரும்போரில், பழையனது.
காவன் மரமாகிய வேம்பினைத் துண்டந்துண்டங்களாகத் தறிப்பித்து,அப்பழையன் யானைகளையே கடாவாகவும், அவன் மகளிரது கூந்தலை அறுத்துத்திரித்து அதனைய் கயிறாகவுங் கொண்டு வண்டியிலிழுப்பித்தனன் எனக் கூறப்பட்டுள்ளது. (பதிற்றுப்பத்து. 44) இப்போரைப்பற்றி, இளங்கோவடிகளும்,
"பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிப் பொறைய" ( சிலப்.27.124-26.)
என்று கூறினார்.
(5) இனி, கடற்கரையிலுள்ள வியலூரை ஒருபோரிற் செங்குட்டுவன் எறிந்தனனென்றும், இதனையடுத்து நேரிவாயிலிற் சோழமன்னரொன்பதின்மரை அழித்ததோடு, இடும்பாதவனத்தும் (இது, சோழநாட்டில் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ளதும், தேவாரப்பாடல் பெற்றதுமான இடும்பாவனம் என்ற தலம் போலும்.) வெற்றி பெற்றனனென்றும் சிலப்பதிகாரங்குறிக்கின்றது.
"சிறுகுர னெய்தல் வியலூ ரெறிந்தபின்
ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்
கொடும்போர் கடந்து." (சிலப்.28:115-19.)
இவற்றுள் ஒன்பதுமன்னரென்றது,சோழர்குடியிற் பிறந்த இளங்கோவேந்தர் ஒன்பதினமரை. செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழன் இறந்ததும், அவன்மகனும் தன் மைத்துனனுமாகிய,இளஞ்சோழன் பட்டத்தை அடைந்த காலத்தே, அதுபொறாமல் பெருங்கலகம் விளைத்துச் சோணாட்டை அலைத்து நின்ற சோழவமிசத்தவர் ஒன்பதின்மரை உறையூர்க்குத் தென்பக்கத்துள்ள நேரிவாயில் (நேரிவாயில் – உறையூர்த் தெற்கில் வாயிலதோர் ஊர்" என்றார்.சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் (பக்-73).
இப்பெயர் கொண்ட ஊர், உறையூரைச் சூழ்ந்த நாட்டுக்குப் பிற்காலத்து வழங்கிய பெயராகிய க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டைச் சார்ந்திருந்த தென்பது, "க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர்நாட்டு நேர்வாயிலுடையான்... வானவன் பல்லவ தரையன்" என்னும் சாஸனப்பகுதியால் விளங்கும். (South Indian Inscriptions. Vol.III.No.21)) என்ற ஊரில் நிகழ்ந்த போரிலே ஒருபகலிற்கொன்று, தன் மைத்துனச் சோழனைப் பட்டத்தில் நிறுவினன் செங்குட்டுவன். தன் தமையனது இவ்வரியசெயலை வியந்து:-
"மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பின ரொன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கு மாண்பின ராதலின்
ஒன்பது குடையு மொருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்." (சிலப்.27:118-23)
என இளங்கோவடிகளே கூறுதல் காண்க. "ஆராத் திருவிற் சோழர்குடிக் குரியோர் - ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்திறுத்து" என்றார் பதிற்றுப்பத்தினும். செங்குட்டுவன் மைத்துனனாகிய இவ்விளஞ்சோழன் பெயர் பெருங்கிள்ளி யென்பது சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையாற் புலப்படும்.(இவனைப் பெருநற்கிள்ளி என்பர், அடியார்க்கு நல்லார்.(சிலப்.பக்.32)) இன்னும் இதன் விரிவை "செங்குட்டுவன் காலத்தரசர்" என்ற பகுதியிற் காண்க. இவ் வரலாறுகளால்,செங்குட்டுவ னிகழ்த்திய போர்களிற்சில பொதுவாக ஒருவாறு அறியப்படுதல் கண்டுகொள்ளலாம்.